டெல்லி: குஜராத்தில் 2002ஆம் ஆண்டு வெடித்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிந்தனர். மேலும் 2ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்நிலையில் இந்த கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனம் பிபிசி, ’இந்தியா - மோடியின் கேள்விகள்’ என்ற தலைப்பில் இரு தொகுப்புகளாக ஆவணப் படத்தை தயாரித்தது.
இதில் முகற்பாகம் கடந்த 17ஆம் தேதி வெளியானது. முதல் பாகத்தில் பிரதமர் மோடிக்கும், இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சமூகத்திற்கும் இடையிலான பிரச்னை, 2002 குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவை குறித்து விவரிக்கப்பட்டிருந்தது.
இந்த தொடர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக, பிரிட்டன் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ராமி ரேஞ்சர் கண்டனம் தெரிவித்திருந்தார். தொடர்ந்து பிபிசியின் ஆவணப்படத்திற்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்புக் கிளம்பியது. மத்திய அரசு அதிகாரிகள், வெளியுறவுத்துறை அதிகாரிகள், தூதர்கள் உள்ளிட்டோர் பிபிசி நிறுவனத்தின் ஆவணப்படத்திற்கு எதிர் கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம், தனக்கு உரிய திருத்தப்பட்ட விதிகள் மற்றும் அவசரகால அதிகாரங்களை பயன்படுத்தி ட்விட்டர் மற்றும் யூடியூப் சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி தொடர்பான வீடியோக்களை முடக்கியது. இந்நிலையில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மோடி குறித்த ஆவணப்படம் திரையிட திட்டமிடப்பட்டது.
கல்லூரி நிர்வாகம் எதிர்ப்பை மீறி, மாணவ அமைப்பினர் ஆவணப்படத்தை திரையிட்ட நிலையில், குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் மாணவர்கள் கூட்டத்தில் புகுந்து தாக்குதல் நடத்தினர். இரு தரப்பு இளைஞர்களும் தங்களுக்குள் தாக்கிக் கொண்ட நிலையில், மாணவர்கள் சிலர் படுகாயம் அடைந்தனர்.