கர்நாடக முதலமைச்சராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா நேற்று முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இதைத்தொடர்ந்து இன்று மாலை பெங்களூவில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூடி, பாஜகவின் உயர் மட்டக்குழுவின் முன்னிலையில் புதிய முதலமைச்சரைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.
அதில் லிங்காயத் பிரிவைச்சார்ந்த மற்றொரு முதலமைச்சரை தேர்வு செய்ய பாஜக உறுப்பினர்கள் முடிவு எடுத்தனர். அதன்படி, லிங்காயத் பிரிவைச் சேர்ந்த பசவராஜ் பொம்மை புதிய முதலமைச்சராக கட்சியின் எம்.எல்.ஏ.க்களால் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
அரசியல் பின்னணி:
இவருடைய தந்தை எஸ்.ஆர். பொம்மையும் கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சராக பதவி வகித்தவர். மேலும் சமீபத்தில் பதவி விலகிய எடியூரப்பாவுக்கும் மிகவும் நம்பிக்கைக்குரியவராகத்திகழ்ந்தவர், பசவராஜ் பொம்மை.
தன்னுடைய இளமைக்காலத்தில் ஜனதா பரிவாரில் இருந்து படிப்படியாக தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர்.
முக்கியப்புள்ளிகள் யார் யாரெல்லாம் பங்கேற்பு
பாஜக எம்.எல்.ஏ.-க்களின் கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் ஜி.கே.ரெட்டி, பாஜக பொதுச்செயலாளரும் கர்நாடக மாநிலப் பொறுப்பாளருமான அருண் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.
யார் இந்த பசவராஜ் பொம்மை?
ஜனவரி 28, 1960ஆம் ஆண்டு, பசவராஜ் பொம்மை, கர்நாடகாவின் லிங்காயத் சமூகத்தில் பிறந்தவர். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற இவர், டாடா குழுமத்தில் பணியாற்றியவர்.
கடந்த 2008ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த பசவராஜ் பொம்மை, கட்சியின் அடுத்தடுத்த படி நிலைகளுக்கு முன்னேறி வந்தார். கடந்த காலங்களில் நீர் வளத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த இவர், முதலமைச்சராகத் தேர்வு செய்வதற்கு முன், உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்தவர்.
அதேபோல, இரண்டு முறை கர்நாடகாவின் மேலவை உறுப்பினராகவும், மூன்று முறை ஷிமோகா தொகுதியின் எம்.எல்.ஏ.-வாகவும் தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.