பரூய்பூர்: டெல்லியில் அஃப்தாப் என்ற இளைஞர், தனது காதலியை கொலை செய்து, உடலை 35 துண்டுகளாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசிய சம்பவம் அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேற்குவங்க மாநிலம் பரூய்பூரில் அதே பாணியில் மற்றொரு சம்பவம் நடந்தது.
கடந்த 12ஆம் தேதி, ஓய்வு பெற்ற கடற்படை வீரர் உஜ்வல் சக்ரவர்த்தியை, அவரது மனைவி ஷியாமலியும், மகன் ஜாயும் சேர்ந்து கொலை செய்து, உடலை ஆறு துண்டுகளாக வெட்டி, அப்பகுதியில் உள்ள குளம் மற்றும் காட்டில் வீசினர். மதுபோதைக்கு அடிமையான உஜ்வல் சக்ரவர்த்தி, மனைவி மற்றும் மகனுடன் தகராறில் ஈடுபட்டபோது இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.
பாலிடெக்னிக் மாணவரான ஜாய், தனது கல்லூரியில் பயன்படுத்தும் மர பிளேடால் உடலை கூறுபோட்டதாக தெரிகிறது. இதையடுத்து உஜ்வலின் தலையை மீட்ட போலீசார், கடந்த 18ஆம் தேதி ஷியாமலியையும், ஜாயையும் கைது செய்தனர். கொல்லப்பட்ட உஜ்வலின் கைகள் இன்னும் மீட்கப்படவில்லை. இந்த நிலையில், அஃப்தாப் பூனவல்லாவால் ஈர்க்கப்பட்டு, அதே பாணியில் தந்தையின் உடலை அப்புறப்படுத்த முயன்றதாக ஜாய் ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், "தாயும் மகனும் மட்டுமே சேர்ந்து உடலை கூறு போட்டு அப்புறப்படுத்தியது உண்மையிலேயே ஆச்சர்யமாக இருந்தது. இந்த கொலைச் சதியில் வேறு சிலருக்கு தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. கைதான தாய், மகனின் செல்போன் அழைப்புகளை சோதனை செய்து வருகிறோம். கொலைக்குப் பிறகு ஷியாமலி, ஜாய் இருவரும் ஒரு சிலரிடம் மட்டுமே பேசியுள்ளனர்.