4 ஆண்டுகளுக்கு பிறகு ஆளுநர் மாளிகையிலிருந்து அகற்றப்பட்ட பேரி கார்டுகள் புதுச்சேரி:துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவின்படி, 4 ஆண்டுகளுக்கு பிறகு ஆளுநர் மாளிகை சுற்றி போடப்பட்டிருந்த தடுப்புகள் (பேரி கார்டுகள்) அகற்றம் செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டு உள்ளது.
புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சிக் காலத்தின் போது அப்போதைய துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாக 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆளுநர் மாளிகை முன்பு நாராயணசாமி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
திமுக கூட்டணி அரசின்போது, பாஜகவினரை நியமன எம்.எல்.ஏ.க்களாக அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நியமித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அப்போது காங்கிரஸ், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு அப்போதைய ஆளுநர் கிரண்பேடி உருவபொம்மையை எரித்தனர். இதன் காரணமாக ஆளுநர் மாளிகை சுற்றியுள்ள பகுதிகளில், பாதுகாப்பு கருதி தடுப்புகள் (பேரி-கார்டுகள்) காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டது.
இதையும் படிங்க:பட்டாசுகளை இருப்பு வைக்கவும் அனுமதி பெறவேண்டும்..! பார்சல் அலுவலகங்களுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு..!
அதனைத்தொடர்ந்து, கிரண்பேடிக்கு பதிலாக புதிய துணைநிலை ஆளுநராக தமிழிசை செளந்தரராஜன் பதவி ஏற்ற பின்னரும், தடுப்புகள் அகற்றாமல் இருந்தது. மேலும், அரசியல் காரணங்களுக்காக ஆளுநர் மாளிகை சுற்றி போடப்பட்டுள்ள தடுப்பு கட்டைகளை அகற்றி பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், 4 ஆண்டுகளுக்கு பிறகு பொது மக்களின் போக்குவரத்துக்கு பயன்படும் வகையில், துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உத்தரவின்படி, ஆளுநர் மாளிகையை சுற்றி போடப்பட்டிருந்த பேரி கார்டுகளை போலீசார் அகற்றினர். இதனால், ஆளுநர் மாளிகை சுற்றியுள்ள சாலைகளை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:மழை இல்லாததால் கருகிய பயிருடன் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட வந்த விவசாயிகளால் பரபரப்பு!