சென்னை:நாட்டில் உள்ள பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்து மத்திய அரசு சட்டம் இயற்ற உள்ளது. இதனால் வங்கி ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெருமளவில் பாதிப்பு ஏற்படும் எனக்கூறி அனைத்து வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்றும், நாளையும் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
மத்திய அரசை எதிர்த்துப் போராட்டம்
இது குறித்து அனைத்து வங்கி சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் கிருபாகரன் நேற்று (டிசம்பர் 15) ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், ”டிசம்பர் 16, 17 ஆகிய நாள்களில் அனைத்து வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.
மத்திய அரசின் பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த வேலைநிறுத்தத்தை முன்னெடுத்துள்ளோம். தற்போது நடைபெற உள்ள கூட்டத்தொடரில் இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருவதால் நாங்கள் இந்தப் போராட்டத்தை அறிவித்துள்ளோம்.
இந்தப் போராட்டம் வங்கி ஊழியர்களுக்காக மட்டுமல்ல மத்திய அரசின் மசோதாவால் அங்கு பொதுத் துறை வங்கியின் 80 கோடி வாடிக்கையாளர்களும், பொதுமக்களும் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்.
இந்த மசோதாவால் வங்கியின் வளர்ச்சியும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும். இந்தப் போராட்டம் வங்கி ஊழியர்களுக்கானது மட்டுமல்ல” என்று தெரிவித்துள்ளார்.