பொதுத்துறை வங்கியின் ஆண்டு ஆய்வுக் கூட்டம் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன் பின்னர், பொதுத்துறை வங்கி ஊழியர்களின் ஓய்வூதியம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியானது.
நிதிச்சேவைகள் துறை செயலாளர் தேபசிங் பாண்டா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, பொதுத்துறை வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்தி மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த புதிய உத்தரவின்படி, ஊழியர், தான் பெற்ற கடைசி சம்பளத்தில் 30 விழுக்காட்டினை குடும்ப ஓய்வூதியமாக பெற முடியும்.
வங்கி ஊழியர்களுக்கு நல்ல பலன்
இதற்கு முன்பு இருந்தத நடைமுறைப்படி, ஊழியர்கள் 15%, 20%, 30% என மூன்று படிநிலைகளில் பிரிக்கப்பட்டு, ரூ.9,284 மட்டுமே பெற முடியும். இந்தத் தொகை மிகவும் சொற்பமானது, எனவே ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தனர்.
இந்நிலையில், அரசு இந்த ஓய்வூதிய உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதையடுத்து ஊழியர் குடும்பத்துக்கு ரூ.30,000இல் இருந்து ரூ.35 ஆயிரம் வரை ஓய்வூதியம் கிடைக்கும்.
மேலும் தேசிய ஓய்வூதிய திட்டத்துக்கு முதலாளிகளின் பங்களிப்பை 10 விழுக்காட்டிலிருந்து 14 விழுக்காடாக உயர்த்தி நிதியமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:தேசிய பணமாக்கல் திட்டத்தை அறிமுகம் செய்த நிர்மலா சீதாராமன்