ஐதராபாத் :தெலங்கானாவில் 10 ஆம் வகுப்பு இந்தி வினாத் தாள் கசிந்த வழக்கில் கைதான மாநில பாஜக தலைவரும், மக்களவை எம்.பி.யுமான பண்டி சஞ்சய் குமார் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தெலங்கானா மாநிலத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி வாரங்கலில் உள்ள தேர்வு மையத்தில் இருந்து, வாட்ஸ் அப் மூலம் இந்தி வினாத்தாள் வெளியானது. முன்னாள் பத்திரிகையாளர் பிரசாந்த் என்பவர், 10ஆம் வகுப்பு இந்தி வினாத்தாளை பண்டி சஞ்சய்க்கு வாட்ஸ் அப்பில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இருவரும் இதுதொடர்பாக பேசிக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இச்சம்பவம் பண்டி சஞ்சய் குமார் வீட்டிற்கு சென்ற போலீசார், தடாலடியாக அவரை கைது செய்தனர். பண்டி சஞ்சய் குமார் கைது செய்யப்பட்டதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரதமர் மோடியின் தென் மாநிலங்கள் பயணத்தின் போது தெலங்கானா பாஜக தலைவர் கைது செய்யப்பட்டு இருப்பது பழிவாங்கும் செயல் என தெரிவித்தனர்.