டெல்லியில் பல்வேறு பூங்காக்களில் காகங்கள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் மயூர் விகார் பகுதியில் உள்ள மத்திய பூங்காவில் 17 காகங்கள் இறந்துள்ளன.
டெல்லியின் துவாரகா பகுதியில் டி.டி.ஏ. பூங்காவில் 2 காகங்களும், மேற்கு மாவட்டத்தில் ஹஸ்த்சால் கிராமத்தில் 16 காகங்களும் இறந்துகிடந்தன. அவற்றில் நான்கு காகங்களின் உடல்கள் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டன.
தொடர்ந்து பூங்காக்களில் இறந்துகிடந்த காகங்கள் அப்புறப்படுத்தப்பட்டு கிருமிநாசினிகள் கொண்டு அப்பகுதியில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதைத்தொடர்ந்து பார்வையாளர்களுக்குத் தடைவிதித்து, பூங்காக்கள் மூடப்பட்டன. காகங்கள் எதற்காக இறந்தன என்பதை விரைவாகக் கண்டறிய, அவற்றின் உடல்கள் பல்வேறு ஆய்வகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இவ்விவகாரம் தொடர்பாக, விரைவுப் பொறுப்புக் குழு ஒன்றை அனுப்பி ஆய்வு மேற்கொள்ளும்படி, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தலைநகர் டெல்லிக்கு அடுத்த பத்து நாள்களுக்கு இறைச்சிக்கான பறவையினங்களைக் கொண்டுவர, அம்மாநில அரசு தடைவிதித்துள்ளது.
இதேபோன்று, பஞ்சாப் மாநில அரசும், ஜனவரி 15ஆம் தேதிவரை இறைச்சிக்கான பறவையினங்களை இறக்குமதி செய்யவும், எடுத்துவரவும் தடைவிதித்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரசின் பாதிப்புகள் மனிதர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. எனினும், இதன் பாதிப்புகள் குறைந்துவருவது ஆறுதல் அளித்துள்ளது. இந்நிலையில், புது வருடம் பிறந்த பின்னர் வார தொடக்கத்திலேயே நாட்டின் பல்வேறு பகுதிகளில் பறவைக்காய்ச்சல் பரவிவருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் ஒருவித பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் திடீரென காகங்கள் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.