பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் காற்றுமாசு காரணமாக கரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு விற்பனை செய்யவும்; வெடிக்கவும் தடை விதிக்கக்கோரி பல்வேறு மனுக்கள் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதில் டெல்லி, ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்திற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மேலும், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் ஏற்கனவே பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாட்டை தடை செய்துள்ளன.
இந்த வழக்கு விசாரணையின்போது, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில், 'ஆந்திரா, அஸ்ஸாம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேகாலயா, தமிழ்நாடு உள்ளிட்ட 23 மாநிலங்களில் உள்ள 122 நகரங்களில் காற்றின் தரம் மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த பசுமைத் தீர்ப்பாயம், ஆந்திரா, அஸ்ஸாம், பிகார், சண்டிகர், சத்தீஸ்கர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா, நாகலாந்து, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 18 மாநில தலைமைச் செயலர்களும் பதிலளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
காற்று மாசினைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநிலங்களும் எழுத்துப் பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்தநிலையில், இந்த வழக்கின் மீதான தீர்ப்பு நீதிபதி ஏ.கே. கோயல் தலைமையிலான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில் இன்று (நவ. 9) விசாரணைக்கு வந்தது.
அப்போது, நாடு முழுவதும் காற்று மாசு அதிகம் உள்ள மாநகரங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல் செய்துள்ளது. மேலும் டெல்லி, ஒடிசாவில் நவம்பர் 10 முதல் 30 வரை, பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவை அனைத்து மாநில தலைமைச்செயலாளர்களுக்கும் அனுப்பி தீவிரமாக செயல்படுத்த வேண்டும் எனவும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க...பணமதிப்பிழப்பு குறித்து பிரதமர் மோடி அறிக்கை வெளியிட வேண்டும் - அசோக் கெலாட்