தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பத்ம ஸ்ரீ விருதை திருப்பி ஒப்படைப்பதாக பஜ்ரங் புனியா அறிவிப்பு! - நரேந்திர மோடி

Bajrang Punia: இந்திய மல்யுத்த சம்மேளன புதிய தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங் ஆதரவாளர் சஞ்சய் சிங் தேர்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, தனது பத்ம ஸ்ரீ விருதை பிரதமரிடம் திருப்பி ஒப்படைப்பதாக அறிவித்துள்ளார்.

Bajrang Punia
Bajrang Punia

By PTI

Published : Dec 22, 2023, 8:43 PM IST

டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங், இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக சாக்‌ஷி மாலிக், வினோஷ் போகத் ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களுக்கு ஆதரவாக முன்னணி வீரரான பஜ்ரங் புனியாவும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர் இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து அவர் பதவியை இழந்தார்.

இதற்கிடையில், இந்திய மல்யுத்த சம்மேளனத் தேர்தலில், பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் ஆதரவாளர்களை போட்டியிட விடக்கூடாது என சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோர், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்தித்து கோரிக்கை வைத்தனர். இருப்பினும், நேற்று (டிச.21) பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் ஆதரவாளரான சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

இதன் காரணமாக போராட்டம் நடத்தியவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். இதன் விளைவாக, மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (டிச.21) அறிவித்தார். இந்த நிலையில், பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் ஆதரவாளர் சஞ்சய் சிங் புதிய தலைவரானதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பத்ம ஸ்ரீ விருதை பிரதமரிடம் திருப்பி ஒப்படைப்பதாக இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமருக்கு கடிதம் வெளியிட்டுள்ள பஜ்ரங் பூனியா, “மரியாதைக்குரிய பிரதமரே, நீங்கள் நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். உங்களுக்கு பனிப்பளு அதிகம் இருக்கும் என்றாலும், மல்யுத்த வீரர்களின் விஷயத்தில் உங்களின் கவனம் பெற விரும்புகிறேன்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் தொல்லை குற்றச்சாட்டை முன்வைத்து, போராட்டம் நடத்தியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நானும் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டேன். அரசு கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, போராட்டமானது கைவிடப்பட்டது.

ஆனால் மூன்று மாதங்கள் ஆகியும், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யவில்லை. நாங்கள் மீண்டும் ஏப்ரல் மாதம் போராட்டத்தில் குதித்தோம். அதன்பின், அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. ஜனவரியில் அவர் மீது 19 புகார்கள் இருந்தன. ஆனால், ஏப்ரலில் அது 7ஆக குறைந்தது. இதன் பொருள், பிரிஜ் பூஷன் சரண் சிங் 12 மல்யுத்த வீராங்கனைகளை, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மிரட்டியுள்ளார் என்பதே" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங் ஆதரவாளர் சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் மோடியைச் சந்தித்து கடிதம் கொடுக்க சொல்ல முயன்றபோது, பஜ்ரங் புனியாவை டெல்லி காவல் துறையினர் தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த பிரபல தென் ஆப்பிரிக்க வீரர்!

ABOUT THE AUTHOR

...view details