டெல்லி : உத்தரப்பிரதேச மாநிலம், காசிபூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் அப்சல் அன்சாரியின் எம்.பி பதவியை பறித்து மக்களவைச் செயலகம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவரும், காசிபூர் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான அப்சல் அன்சாரிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் தேதி காசிபூர் தொகுதியின் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ கிருஷ்ணானந்த் ராய் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அப்சல் அன்சாரிக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி உத்தரப்பிரதேச மாநிலம், காசிபூரில் உள்ள எம்.பி.; எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை நிறைவுபெற்ற நிலையில் அப்சல் அன்சாரியை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. மேலும் இந்த வழக்கில் அப்சல் அன்சாரிக்கு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. மேலும் கடந்த 1997ஆம் ஆண்டு வாரணாசியைச் சேர்ந்த தொழிலதிபர் நந்த் கிஷோர் ருங்தா என்பவர் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கும் இவர் மீது நிலுவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நீதிமன்றத்தின் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அடுத்து அப்சல் அன்சாரியின் எம்.பி. பதவியை பறித்து மக்களவைச் செயலகம் நடவடிக்கை எடுத்து உள்ளது. இது தொடர்பாக மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொலை வழக்கில் உத்தரப்பிரதேச மாநிலம், காசிபூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் அப்சல் அன்சாரிக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவரது எம்.பி. பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.