டெல்லி: ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இருந்து சுதந்திரம் கிடைத்த 75ஆவது ஆண்டை இந்தியா கொண்டாடி வருகிறது. இந்த வேளையில், சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வுகள், முக்கிய ஆளுமைகள் குறித்த சிறப்பு தொகுப்பை நமது ஈடிவி பாரத் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கடைசி முகலாய மன்னன் பகதூர் ஷா சஃபார் குறித்து இத்தொகுப்பில் காணலாம்.
கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக வீறு கொண்டெழுந்த கடைசி முகலாய மன்னன் பகதூர் ஷா சஃபார், இந்தியர்கள் மனதில் வீரத்தை விதைத்த மன்னன் ஆவார். முகலாய மன்னர்களில் சுதந்திர வேட்கை கொண்டவர்களில் இவர் முக்கியானவர்.
கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக இவர் கலகம் செய்யத் தொடங்கியது, ஆங்கிலேயர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. பொதுமக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். ஆங்கிலேயர்களிடம் சிக்கிய பகதூர், சிறைச்சாலையில் பல சித்ரவதைகளை அனுபவித்தார்.
பசியால் தவித்த பகதூர், உணவு கேட்டதற்கு, ஆங்கிலேயர்கள் அவரது மகனின் தலையை வெட்டி தட்டில் வைத்து கொடுத்திருக்கிறார்கள். அவரது மகன்களின் பிணங்களை டெல்லி நுழைவு வாயிலில் தொங்கவிட்டிருக்கிறார்கள், அப்போதுதான் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படும் என்று. தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி நுழைவு வாயில், இந்தக் கோர சம்பவத்துக்கு சான்றாக இருக்கிறது.
1775 அக்டோபர் 24ஆம் தேதி பிறந்தவர் பகதூர் ஷா சஃபார். இவரது தந்தை இரண்டாம் அக்பர் ஷா, தாயார் லால்பாய் ஆவர். தந்தையின் இறப்புக்கு பிறகு 1837ஆம் ஆண்டுதான் இவர் அரசரானார். 1857ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்து போர் செய்த புரட்சிகர படைக்கு தலைமை தாங்கும்போது இவருக்கு வயது 82.
ஆங்கிலேயர்களை எதிர்க்கும் இவரது குணத்தால், முகலாய சாம்ராஜ்யம் வீழ்ச்சியடையத் தொடங்கியது. 1857ஆம் ஆண்டு மீரட்டில் நடந்த ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் போருக்கு தலைமை தாங்கியது இவர்தான் எனக் கூறப்படுகிறது. இந்தப் போரில் மற்ற இந்திய மாநிலங்களின் உதவியுடன் ஆங்கிலேய அரசு புரட்சியாளர்களை நசுக்கியது. இதிலிருந்து தப்பிச் சென்ற பகதூர் ஷா, ஹுமாயூனின் கல்லறை பகுதியில் தங்கியிருந்தார். ஆங்கிலேய அலுவலர் வில்லியம் ஹட்சன், சதியின் மூலம் பகதூரை கைது செய்தார்.
ஆங்கிலேய அரசு தேசத்துரோக வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளை அவர் மீது பதிவு செய்தது. 40 நாள் வழக்கு விசாரணைக்குப் பிறகு, பகதூரை ரங்கூனுக்கு (ஆங்கிலேயர்கள் ஆட்சியின் கீழ் இருந்த பர்மா) நாடு கடத்த உத்தரவிட்டது.