நவீன அறிவியல் மருத்துவ முறைகளால் லட்சக்கணக்கான நோயாளிகள் இறந்துவிட்டதாக தவறான கருத்துக்களை பரப்பும் கார்ப்பரேட் சாமியார் பாபா ராம் தேவை கைது செய்ய வேண்டும் என்றும், அறிவியலுக்குப் புறம்பான அவரது நிரூபணமாகாத மருந்துகளுக்கும் மருத்துவ முறைகளுக்கும் மத்திய அரசு தடை விதித்திட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கூறியுள்ளதாவது,
கரோனா குறித்து முதலில் சொன்ன நவீன மருத்துவம்
கோவிட் 19 என்ற கொடிய வேகமாகப் பரவும் தொற்று நோய் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. இது சார்ஸ் கோவிட் 2 என்ற வைரஸ் நுண்ணுயிரியால் பரவுகிறது. இது மனிதர்களிடம் நுரையீரல் மற்றும் பல்வேறு உறுப்புகளின் செயல் இழப்பை உருவாக்கி இறப்புகளை உருவாக்குகிறது என்பதை மனித குலத்திற்கு அறிவித்தது நவீன அறிவியல் மருத்துவம்.
கரோனா தொற்றுக்கு உள்ளாகும் நபர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் என்ன, அத்தொற்று எவ்வாறு பரவுகிறது, அத்தொற்றிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது உள்பட இந்நோய் குறித்த அறிவியல் ரீதியான விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது நவீன அறிவியல் மருத்துவமாகும்.
கரோனா தொற்றுக்கு உள்ளானவர்களிடம் உள்ள தொற்றை எவ்வாறு உறுதி செய்வது, அதற்கு எத்தகைய பரிசோதனைகளைச் செய்திட வேண்டும், எத்தகைய சிகிச்சைகளை வழங்கிட வேண்டும், சிகிச்சை வழங்கும் மருத்துவக் குழு எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் நிரூபணமான முறைகளின் அடிப்படையில் வழங்கி வருவது நவீன அறிவியல் மருத்துவமாகும்.
அறிவியலை அடிப்படையாகக் கொண்ட மருத்துவமுறை
இன்றைக்கு எந்த அறிவியல் துறையும் தனித்து இயங்கிவிட முடியாது. பல்வேறு அறிவியல் தொழில் நுட்பத் துறைகள் ஒன்றிணைந்தே செயல்பட முடியும். அதைக் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் நிரூபணம் செய்துள்ளன. நவீன அறிவியல் மருத்துவம் என்பது பல்வேறு அறிவியல் தொழில் நுட்பத் துறைகளோடு இணைந்து, அவற்றில் உள்ள பல்வேறு நவீன கண்டுபிடிப்புகளையும் உள்வாங்கியே செயல்படுகிறது.
நவீன அறிவியல் மருத்துவம், உலகம் முழுவதும் மனித குலம் இதுவரை உருவாக்கி வளர்த்திருந்த மருத்துவ முறைகளில் பயன்படத்தக்கவற்றை, அறிவியல் ரீதியாக ஏற்கத்தக்கவைகளை ஏற்று வளர்ந்துள்ளது. இன்றைக்கு அனைத்து அறிவியல் தொழில்நுட்பத் துறைகளிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் உடனடியாக உள்வாங்கி, உலகளாவிய ஒட்டு மொத்த மனித குலத்தின் பொதுவான மருத்துவ முறையாக பிரமிக்கத்தக்க வகையில் பரிணமித்துள்ளது.
எந்த அறிவியலும் திடீரென்று வானத்திலிருந்து குதித்து வந்திட முடியாது...
பாபா ராம்தேவ் கூறுவது போல் 200 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று தோன்றிய மருத்துவ முறையல்ல நவீன அறிவியல் மருத்துவம். எந்த அறிவியலும் திடீரென்று வானத்திலிருந்து குதித்து வந்திட முடியாது. நவீன அறிவியல் மருத்துவ முறையின் வளர்ச்சியாலும், உலக நல நிறுவனம் நவீன அறிவியல் மருத்துவ முறைகளின் அடிப்படையில் உலக நாடுகள் அனைத்திற்கும் ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்கி வருகிறது. நாடுகளிடையே ஒருங்கிணைந்த செயல்பாட்டை உருவாக்கி வருகிறது. இதனால் இன்று கரோனாவை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்துள்ளது.
குறுகிய காலத்தில் கரோனாவிற்கு எதிராக தடுப்பூசிகளை மனிதகுலம் கண்டுபிடித்ததின் விளைவாக இன்று பல நாடுகள் கரோனாவின் கோரப்பிடியிலிருந்து விடுபடத் தொடங்கியுள்ளன. மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். உலக நாடுகளின் அரசுகள் இன்னும் கூடுதல் ஒத்துழைப்புடன், அதிக அக்கறையுடன்,பொறுப்புணர்வுடன் செயல்பட்டிருந்தால் பாதிப்புகளை பல மடங்கு குறைத்திருக்க முடியும்.
தனிநபர் இடை வெளியை பரமாரிக்க வேண்டும்,கைகளை அவ்வப் பொழுது நன்றாக சோப்புப் போட்டு கழுவ வேண்டும், கைகளை கிருமிநாசினி கொண்டு தூய்மை படுத்திக் கொள்ள வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும்.இவற்றை எல்லாம் செய்தால், கொரோனா தொற்றை தடுக்கலாம் என்ற எளிய அறிவியல் சார்ந்த வழிகாட்டல்கள் கூட நவீன அறிவியல் மருத்துவத்தின் சாதனையாகும்.
முதன்முதலில் முகக்கவசத்தைப் பயன்படுத்திய நவீன மருத்துவர்
முகக் கவசம் பயன்பாட்டிற்கு வர காரணமாக இருந்தவர் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஜோகன் மிக்குலிக்ஸ் ஆவார். இவர் 1897 ல் முகக்கவசத்தை தொற்றை தடுத்திட பயன் படுத்தத் தொடங்கினார்.
பாபா ராம்தேவ் போன்றோர் முகக்கவசத்தை அணியாவிட்டாலும், அவர்களைச் சுற்றி இருப்பவர்கள் அதை அணிவதால்தான் அவர்கள் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதை அறிய வேண்டும். உலகமே இன்று அறிவியலை நம்புகிறது. அறிவியல் சார்ந்து செயல்படுகிறது. இதற்கு முன்பு இத்தகைய நிலை உலக வரலாற்றில் இருந்ததில்லை.
நவீன அறிவியல் மருத்துவத்தின் வழிகாட்டல் அடிப்படையில் உலகம் செயல்படாமல் இருந்திருந்தால், கரோனாவால் உலகில் பல கோடி மக்கள் மடிந்திருப்பார்கள். கரோனா ஒரு பெரும் சவாலாக இருந்த போதிலும் அதை மனித குலம் வெற்றிகரமாக எதிர்கொள்ள உதவியதும், லட்சக்கணக்கான மக்கள் உயிர் பிழைத்திட உதவியதும் நவீன அறிவியல் மருத்துவம் தான்.