ஷிவமோகா:கர்நாடக மாநில சட்டசபை தேர்தல், வருகிற மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் அனல் பறக்க நடைபெற்று வருகிறது. இதனிடையே, ஆளும் பாஜக கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பாலானவர்கள் மாறி வருகின்றனர். அந்த வகையில், கர்நாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர் அயனூர் மஞ்சுநாத், சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, இன்று (ஏப்ரல் 19) அவரது புதிய அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அயனூர் மஞ்சுநாத், “இன்று, நான் சபாநாயகரைச் சந்திக்கப் போகிறேன். சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன். சபாநாயகர் எனக்கு நேரத்தை கொடுத்துள்ளார். நான் இன்று ஹூப்ளிக்கு பயணம் செய்ய உள்ளேன். அங்கு, எனது ராஜினாமாவை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கிறேன். அதேநேரம், பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்ய உள்ளேன்.
நாளை (ஏப்ரல் 20), ஷிவமோகா சட்டமன்றத்தொகுதியில் நிற்பதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளேன். மதியத்துக்குள், எந்த கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளேன் என்பதை நான் அறிவிப்பேன். ஒவ்வொருவரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகத்தான் நான் போட்டியிடுகிறேன். என்னை நம்பி மக்கள், என்னை தேர்ந்தெடுப்பார்கள் என்பதில் நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, முன்னாள் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவின் ஷிவமோகா தொகுதியில் இருந்து தொகுதியைப் பெற மஞ்சுநாத் விரும்புவதாகவும், ஆனால், பஜ்ரங் தள் ஆதரவாளர் ஹர்ஷா படுகொலை செய்யப்பட்ட இந்த தொகுதிக்கு பாஜக சீட் ஒதுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஈடிவி பாரத் செய்திகளுக்குக் கிடைத்த ஆதாரங்களின்படி, ஷிவமோகா தொகுதி அயனூர் மஞ்சுநாத்துக்கு ஒதுக்காததாலேயே, தான் பாஜகவில் இருந்து விலகுவதாக மஞ்சுநாத் அறிவித்ததாகத் தெரிகிறது.