டெல்லி:நாட்டின் 74வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட்டுகிறது. அந்த வகையில் தலைநகரான டெல்லியில் உள்ள கடமை பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல் சிசி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
இதனையடுத்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் கடமைப் பாதையில் ஜனாதிபதி மாளிகை அருகே தொடங்கிய அணிவகுப்பு விஜய் சவுக், இந்தியா கேட் மற்றும் செங்கோட்டை வரை நடைபெற்றது. இதில் ராணுவ பிரிவில் முப்படைகளுடன் குதிரைப்படை மட்டுமின்றி, ஒட்டக படையும் இடம் பெற்றது. கடற்படையிலிருந்து 144 இளம் மாலுமிகள் பங்கேற்றனர்.
இந்த குடியரசு தின விழாவில், முதல் முறையாக 3 பெண் அலுவலர்களும், 6 அக்னிபாத் வீரர்களும் கலந்து கொண்டனர். விமானப்படையில் 4 அலுவலர்கள் உடன் 148 வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர். அதேபோல் 148 தேசிய மாணவர் படையினரும், 448 நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களும் சென்றனர். மேலும் அணி வகுப்பில் எகிப்து நாட்டு படை பிரிவும் பங்கேற்றது.