இந்தியாவில் கரோனா 2ஆம் அலை உச்சத்தில் உள்ளது. தினந்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், லேசான அறிகுறிகள் இருந்தால் சிடி ஸ்கேன் செய்வதை தவிர்க்க வேண்டுமென எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், " ஒருமுறை சி.டி ஸ்கேன் செய்வது 300-400 மார்பு எக்ஸ்-கதிர்களுக்கு சமம் என்றும், அதிகப்படியான கதிர்வீச்சால் பிற்காலத்தில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. சிடி ஸ்கேன் மூலம் நுரையீரலில் நிமோனியா அல்லது வெள்ளை திட்டுகளின் அறிகுறிகள் இருக்கிறதா என்பதை கண்டறவதன் மூலம் கரோனா பாதிப்பை உறுதிசெய்கின்றனர்.
சில உருமாறிய கரோனா, ஆர்டிபிசிஆர் சோதனையில் கண்டறிய முடியாததால், கடந்த ஆண்டைவிட அதிகமான மக்கள் விலையுயர்ந்த ஸ்கேன் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளனர். 30-40 விழுக்காடு மக்கள் அறிகுறியற்றவர்களாக உள்ளனர். ஆனால் கோவிட் பாசிட்டிவ் மற்றும் சி.டி ஸ்கேன் செய்யப்பட்டுள்ளனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
தற்போது சிடி ஸ்கேன் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. நிறைய பேர் சி.டி ஸ்கேன் செய்து வருகின்றனர். ஆனால், லேசான அறிகுறிகள் பெரும்பாலும் சிடி ஸ்கேனில் கண்டுபிடிக்க முடியாது. எனவே, மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகே சிடி ஸ்கேன் செய்திட வேண்டும்.
ஆக்சிஜன் செறிவுள்ள அறிகுறியற்ற நோயாளிகள் சி.டி ஸ்கேன்களுக்கு செல்லக்கூடாது. லேசான அறிகுறிகளுடன் COVID பாசிட்டிவ் ஆனால், ரத்த பரிசோதனைகளுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. தேவையற்ற பயத்தைதான் உருவாக்கும்" எனத் தெரிவித்தார்.