இந்தியாவில் ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் தலையெடுத்து நீண்டகாலம் ஆகிறது. இந்தத் தொழில்நுட்பத்தால் வேலையிழப்புகள் எப்படி ஏற்படுகிறது என பி.ஆர். சோப்ரா இயக்கிய ‘நயா தவுர்’ படத்தில் அப்பட்டமாக காட்டப்பட்டிருக்கும். பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் திலிப் குமார் இதில் குதிரை வண்டி ஓட்டுபவராக நடித்திருப்பார்.
ஜமீன்தார் ஒருவரின் மகன், கதாநாயகன் வசிக்கும் கிராமத்தில் குதிரை வண்டிக்கு மாற்றாக பேருந்தை அறிமுகப்படுத்துவான். இதனால் குதிரை வண்டி ஓட்டும் பல தொழிலாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதை எதிர்த்து கதாநாயகன் போராடுவது போல ‘நயா தவுர்’ படத்தின் கதை இருக்கும்.
தற்போது கரோனா சூழலில், ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் விரைவாக வளர்ச்சியடைந்து வருகிறது. உலகம் முழுவதும் கரோனாவால் பலரும் வேலையிழந்திருப்பது நாம் அறிந்ததே. ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது, அதிகப்படியான வேலையிழப்புகளுக்கான அறிகுறியாகும்.
ஆட்டோமேஷன் பயன்பாடு எந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்றால், உணவகங்களில் கூட மனிதர்களுக்கு பதிலாக ரோபோக்களை சப்ளையர்களாக பயன்படுத்தும் முயற்சி மேலெழுந்துள்ளது. அதேபோல் சில பள்ளிகள், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களை நடத்த ரோபோக்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளன. சில நிதி நிறுவனங்கள் தங்களுக்கு ஆலோசகராக ரோபோக்களை நியமிக்க திட்டமிட்டுள்ளன. இதன்மூலம் பயனாளர்களுக்கு 24 மணி நேரமும் தங்கு தடையின்றி சேவையை வழங்கமுடியும் என நம்புகின்றனர்.
ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் அதிகரிப்பதன் ஆரம்ப நிலை மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக தெரியலாம். ஆனால், பின்னாட்களில் இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். கணினி தொழில்நுட்பம் நம் நாட்டுக்குள் வந்தபோது, கடும் எதிர்ப்புகள் எழுந்தன. ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால், தற்போது கணினி இல்லாத இடங்களே இல்லை என்று கூறலாம். இந்த நிலையை மொபைல் டெக்னாலஜியுடனும் பொருத்திப்பார்க்க முடியும்.