இந்தூர் : இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளது. இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி பஞ்சாப், மொஹாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்றது. முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நடைபெறுகிறது. இன்றைய இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பாட் கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ், கிளைன் மேக்ஸ்வெல் உள்ளிட்டோருக்கு இந்த ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து ஆட்டம் தொடங்கியது. இதில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் எடுத்த நிலையில், மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர், மீண்டும் பிற்பகல் 2.50 மணிக்கு ஆட்டம் தொடங்கியது.
இதில் நிலைத்து நின்ற ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் இருவரும் சதம் அடித்து இந்திய அணிக்கு வலு சேர்த்தனர். மேலும், ஷ்ரேயாஸ் 3 சிக்ஸர் 11 பவுண்டரிகள் உடன் 105 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதேபோல், 4 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் உடன் 104 ரன்கள் எடுத்த நிலையில், சுப்மன் கில் வெளியேறினார்.
மேலும், சூர்யகுமார் யாதவ் 6 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் விளாசி 72 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அதேநேரம், கேப்டன் கே எல் ராகுல் 52 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இவ்வாறு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 399 ரன்களைக் குவித்தது.