புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அலுவலகம் நிர்வாகம் சீரமைக்கப்பட்டு மக்கள் சேவைக்காக எளிமைப்படுத்தப்பட்டு சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்திக் குறிப்பில், ”புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் பல ஆண்டுகளாக மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த ஆஷா குப்தா, செய்தி தொடர்பாளராக பணியாற்றிய குமரன், குறைகேட்கும் அலுவலராக பணியாற்றிய காவல்துறை அலுவலர் பாஸ்கரன் அரசுத்துறைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு பதிலாக அவர்கள் இடத்தில் ஆளுநர் மாளிகை மேற்பார்வையாளராக சந்திரபோஸ், செய்தி தொடர்பாளராக குணசேகரன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் நிர்வாகம் சீரமைக்கப்பட்டுள்ளது. செலவினங்கள் கண்காணிக்கப்பட்டு அதிகளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. செலவிடும் முறையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேற்பார்வையாளர்கள் 3000 ரூபாய்க்கு மேல் என்ன செலவு செய்ய திட்டமிட்டாலும் அது ஆளுநரின் தனிச்செயலாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
அதைப்போல துணை நிலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு பொருள்கள் எடுப்பதாக இருந்தாலும், ஒப்பந்த அடிப்படையில் பொருள்கள் எடுப்பதாக இருந்தாலும், ஒப்பந்த அடிப்படையில் நிகழ்ச்சிகள் நடத்துவதாக இருந்தாலும், அதன் செலவு கணக்குகள் முன்னதாகவே சமர்ப்பிக்கப்பட்டு கட்டாயம் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
புதிதாக எந்த பொருள் வாங்கினாலும் குறைந்த செலவில் ஒப்பீடு அடிப்படையில் முன்அனுமதி பெற்று வாங்கப்பட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களிடமிருந்து பெறப்படும் மற்றும் வரும் கோரிக்கைகளை பரிசீலனை செய்வதற்கு குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் ஜூன் 27ஆம் தேதி புதிய அமைச்சரவை பதவியேற்கும் - ஆளுநர் தமிழிசை