சூரத்:உலகம் முழுவதும் இன்று (பிப்.14) காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக காதலர் தினத்தன்று, தாங்கள் விரும்பும் நபர்களுக்கு ரோஜாப்பூவை கொடுத்து அன்பை பரிமாறுவது வழக்கம். அந்த வகையில் குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஆரோ பல்கலைக்கழக மாணவர்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்க முலாம் பூசப்பட்ட ரோஜா பூக்களை பரிசாக அனுப்பியுள்ளனர். 151 ரோஜாப்பூக்கள் அடங்கிய தங்க முலாம் பூசப்பட்டுள்ள பூங்கொத்து, பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மாணவர் மேஹக் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி தான் எங்களது முன்னுதாரணம். மாணவர்கள் மீதான அவரது உணர்வுகள் அனைவருக்கும் தெரியும். காதலர் தினத்தன்று தாங்கள் விரும்பும் நபர்களுக்கு, சிறப்பு பரிசுகளை வழங்குவது இயல்பு. குறிப்பாக இந்த நாளில் நாம் விரும்பும் நபர்களுக்கு ரோஜா பூக்களை வழங்கி அன்பை வெளிப்படுத்துவோம். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்க முலாம் பூசப்பட்ட ரோஜா பூங்கொத்தை வழங்க முடிவு செய்தோம். பெற்றோர் எங்களுக்கு வழங்கும் பணத்தை சேமித்து, இந்த பூங்கொத்தை வாங்கியுள்ளோம்" என்றார்.