பாலக்காடு : அரிசி திருடியதாக பழங்குடி இன இளைஞர் மது அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கேரள மாநிலம் அட்டப்பாடி, கடுகுமன்னா என்ற பழங்குடி கிராமத்தை சேர்ந்த மல்லான் என்பவரின் மகன் மது.
கடந்த 2018-ம் ஆண்டு அரிசி திருடியதாக அப்பகுதியைச் சேர்ந்த சிலரால் மது அடித்து துன்புறுத்தப்பட்டார். கிராம மக்கள் அடித்து துன்புறுத்தியதில் மது படுகாயம் அடைந்தார். தாக்குதல் சம்பவத்தில் போலீசார் தலையிட்டு மதுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மது ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேசிய பழங்குடி ஆணையம், சம்பந்தப்பட்டவர்கள் மீது எஸ்சி, எஸ்டி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கேரளா காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக வழக்கு விசாரணை கேரள எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
2018-ம் ஆண்டு இந்த வழக்கில் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மொத்தம் 16 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் மதுவின் தாய் மற்றும் சகோதரிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்ட நிலையில், அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.