ஜான்சி :உமேஷ் பால் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடி அடிக் அகமதுவின் மகன் ஆசாத் என்கவுன்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டார். உத்தர பிரதேசத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு பகுஜான் சமாஜ் எம்எல்ஏ ராஜூ பால் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த பிரபல ரவுடி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்திக் அகமது மற்றும் அவரது சகோதர் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சிறையில் இருந்து கொண்டே அத்திக் அகமது பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
ராஜூ பால் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த உமேஷ் பாலுக்கு, சிறையில் இருக்கும் அத்திக் அகமதுவால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்பட்டது. முன்னதாக கடந்த 2006 ஆம் ஆண்டு உமேஷ் பாலை, அடிக் அகமதுவின் கும்பல் கடத்தியதாக குற்றச்சாட்டு இருந்தது. இந்நிலையில், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீசார் உமேஷ் பாலுக்கு பாதுகாப்பு அளித்து வந்தனர்.
இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி மர்ம நபர்களால் உமேஷ் பால் பொது வெளியில் சுட்டுக் கொல்லப்பட்டார். மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் பகுதியில் பட்டப்பகலில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் உமேஷ் பால் படுகொலை செய்யப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் ஒரு காவலரும் கொல்லப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் சிறையில் இருக்கும் அத்திக் அகமதுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டடது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.மேலும், உமேஷ் பால் படுகொலை சம்பவம் உத்தரபிரதேச சட்டப்பேரவையில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாகவும், மாநிலத்தை ரவுடிகளை வளர்த்து விட்டது சமாஜ்வாதி கட்சி தான் என்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், எதிர்கட்சித் கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சுட்டிக் காட்டி எச்சரிக்கை விடுத்தார். இந்த உமேஷ் பால் கொலை வழக்கில் இருவரை துப்பாக்கிச் சூடு நடத்திக் கொன்ற போலீசார் வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்தும் தேடியும் வந்தனர்.
இதனிடையே உமேஷ் பால் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக அடிக் அகமதுவின் மகன் ஆசாத் அறிவிக்கப்பட்டார். அவரை தேடப்படும் குற்றவாளியாக உத்தரபிரதேச போலீசார் அறிவித்தனர். மேலும் ஆசாத்தின் தலைக்கு 5 லட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்குவதாக உத்தர பிரதேச போலீசார் அறிவித்தனர்.
உமேஷ் பால் கொலை வழக்கில் ஆசாத்தை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில், ஆசாத்தை என்கவுன்டர் செய்து கொன்றதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். ஆசாத் மற்றும் அவனது கூட்டாளி மக்சுதான் ஆகியோர் என்கவுன்டர் செய்ததாக போலீசார் கூறினர். சுட்டுக் கொல்லப்பட்ட இருவரும் உமேஷ் பால் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள் என உத்தரபிரதேச சிறப்பு படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க :பிபிசி இந்தியா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு! என்ன காரணம் தெரியுமா?