தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 11, 2020, 6:49 PM IST

ETV Bharat / bharat

'மோடியால்தான் பிகார் வெற்றி சாத்தியமானது!'

டெல்லி: பிகார் சட்டப்பேரவையில் தேர்தலிலும், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்றதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைச்சரவைக் குழு சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி குறித்து பாஜக அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. காணொலி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர்கள், பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால்தான் சாத்தியாமானது என்றும் இந்த வெற்றியை மோடிக்குச் சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தனர்.

தேர்தல் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தபோது, அவர் புன்னகித்ததாகவும், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும் அமைச்சரவைக் குழு கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும், மோடியின் ஈர்ப்புதான் பாஜகவிற்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் வெற்றிகளைப் பெற்றுத்தருவதாகவும் அவர் கூறினார்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முன்னணி பரப்புரையாளராகப் பிரதமர் நரேந்திர மோடி விளங்கினார். அவர் பிகார் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் 12 தேர்தல் பேரணியில் கலந்துகொண்டு பரப்புரையாற்றி வாக்கு சேகரித்தார். பிரதமர் மோடியின் மீது வைத்திருந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கும் மக்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர் என்று ஒரு அமைச்சர் தெரிவித்தார்.

உஜ்வாலா திட்டம், வீடுதோறும் தண்ணீர் கொண்டுசெல்லும் திட்டம், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது ஆகியவற்றை கருத்தில்கொண்டு பிரதமர் மோடிக்கு இளைஞர்களும், பெண்களும் அதிகளவில் வாக்களித்தனர் என்றும், பிரதமரின் புகழ் ஒப்பிட முடியாதது என்றும் அமைச்சரவைத் கூட்டத்தில் பங்கேற்ற மற்றொரு அமைச்சர் தெரிவித்தார்.

நடந்துமுடிந்த பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக போட்டியிட்ட 110 தொகுதிகளில் 74 தொகுதிகளில் வெற்றிபெற்றது. அதன் கூட்டணி கட்சியான ஜனதா தளம் 43 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

இந்தத் தேர்தலில் அதிகளவிலான தொகுதிகளில் வெற்றிபெற்றதன் மூலம் தேஜஷ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ளது. இந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் சொற்ப இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details