கவுகாத்தி:அசாம் மாநிலத்தின் கம்ரூப் மாவட்டத்தில் உள்ள அமிங்கோன் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வர் பால் என்பவர் நேற்று (ஆக. 19) காலை தனது வீட்டின் அறையில் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு காரணமாக அவரது குடும்பத்தினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புவனேஸ்வருக்கும், அவரது மனைவிக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு (ஆக. 18) தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், புவனேஸ்வரின் மனைவி அமிங்கோன் காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்தார். இதை தொடர்ந்து, இருவருக்கும் இடையே பிரச்சனையை தீர்க்க புவனேஸ்வரை காவலர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்தனர்.
காவல் துறை நடத்திய பேச்சுவார்த்தையில் இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், அப்போது அங்கிருந்த காவல் துறை அதிகாரி ஒருவர், புவனேஸ்வரின் மனைவி அளித்த புகாரின்பேரில் புவனேஸ்வரை சிறையில் அடைக்காமல் இருக்க, 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என கேட்டதாக அவரின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பணம் கொடுக்கவில்லை என்றால் புவனேஸ்வரை சிறையில் அடைப்போம் எனவும் அந்த காவல் துறை அதிகாரி மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, புவனேஸ்வரின் மூத்த சகோதரி கூறும்போது,"காவல் துறையினர் கேட்ட லஞ்ச பணத்தை கொடுக்க முடியாத இயலாமையை எண்ணி, எனது சகோதரர் என்னிடம் மிகவும் வேதனைப்பட்டார்" என்றார். புவனேஷ்வரை, அவரது குடும்பத்தினர் நேற்று காலையில் அவரின் அறையில் தூக்கிட்டு இறந்த நிலையில் கண்டுள்ளனர். அங்கிருந்து தற்கொலை தொடர்பான அவரின் கடிதம் ஏதும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:போலீசிடம் தப்பித்த குற்றவாளியை அடித்தே கொன்ற பொதுமக்கள்