திபு: அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை (அக். 9) அன்று ஒரு இளைஞர் பேசும் காணொலி ஒன்று வைரலானது.
அந்தக் காணொலியில், அந்த இளைஞர் கூறியதாவது, "அஸ்ஸாம் மக்களே, நான் திமாப்பூரிலிருந்து இந்தக் காணொலியை வெளியிடுகிறேன். நான் இங்கே இன்று (அதாவது அக். 9) ஒரு வேலையாக வந்தேன்.
பிஸ்டலும் 3 குண்டுகளும்
அப்போது, சிலர் என்னிடம் வந்து ஒரு பிஸ்டலையும், அதில் மூன்று குண்டுகளையும் வைத்து கொடுத்து, அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை கொலை செய்ய வேண்டும் எனக் கூறினார்கள்" என்றார்.
அந்தக் காணொலியில் அவர் கையில் துப்பாக்கியுடன் கண்ணீர் மல்க பேசினார். இந்தக் காணொலி குறித்து அறிந்த கர்பி ஆங்லாங் காவல் துறையினர், அஸ்ஸாம் - நாகலாந்து எல்லையில் உள்ள கட்காத்தி பகுதியில் உள்ள உணவகத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த அந்த இளைஞரை மீட்டனர்.
மிரட்டல்
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரின் பெயர் சரத் தாஸ் என்றும், அஸ்ஸாம் மாநிலத்தின் லக்கிம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
மேலும், அந்தக் கும்பல் அவரிடமிருந்து மூன்று லட்சம் ரூபாயையும், சில ஆவணங்களையும் பறித்துவிட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த வைரல் காணொலி குறித்து அவர்கள் அறிந்தால், தன்னை கொலை செய்துவிடுவார்கள் என சரத் தாஸ் காவலர்களிடம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: லக்கிம்பூர் விவகாரம்: குடியரசுத் தலைவரிடம் நேரம் ஒதுக்கக்கோரி காங்கிரஸ் கடிதம்