சில்சார் (அஸ்ஸாம்):சில்சார் கைவர்த பரிஷத் (Silchar Kaivarta Parishad) அமைப்பின் தலைவர் சுஜித் தாஸ் சௌத்ரி மற்றும் அவருடன் சேர்த்து 10 நபர்கள் கும்பிர்கிராம் விமான நிலையத்தில் இருந்து (Kumbhirgram airport) மேற்குவங்க மாநிலத்தின் தலைநகர் கல்கத்தா செல்லும் அலையன்ஸ் ஏர்லைன்ஸ் (Alliance Airlines) விமானம் மூலம் பயணிக்க இருந்துள்ளனர்.
விமானம் புறப்படுவதற்கு முன் பயணிகள் தங்களது செல்போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்தோ அல்லது இணைய சேவையை ஆஃப் செய்தோ வைக்க வேண்டியது விமானத்தில் பயணிக்கும் போது பின்பற்ற வேண்டிய சட்டங்களுள் ஒன்று. இதனை சற்றும் பொருட்படுத்தாமல் சில்சார் கைவர்த பரிஷத் அமைப்பின் தலைவர் சுஜித் தாஸ் சௌத்ரி, மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செல்போனில் சத்தமாக பேசியுள்ளார்.
அவரை கண்டித்த விமானப் பணிப்பெண், சுஜித் தாஸ் சௌத்ரி செல்போனை பயன்படுத்தாமல் இருக்குமாறும், அதை ஸ்விட்ச் ஆஃப் செய்யுமாறும் கூறியுள்ளார். இதனால் அவர் விமானப் பணிப்பெண்ணிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து தலைமை விமானி, சுஜித் தாஸ் சௌத்ரியை சக பயணிகளுக்கு இடையூறு செய்ததாகவும், விமானத்தில் செல்போன் பயன்படுத்துவதன் சட்டத்தை மீறியதாகவும் அவரையும், அவருடன் வந்த 10 பேரையும் விமானத்தில் இருந்து இறக்கிவிட்டனர்.
இதனையடுத்து விமான நிலைய அதிகாரிகள், சுஜித் தாஸ் சௌத்ரி மற்றும் அவருடன் பயணித்த நபர்கள் என 11 பேரையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால், சில்சாரில் உள்ள கும்பிர்கிராம் விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
இதையும் படிங்க: பெண் காவலருக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் தொந்தரவு - காவலர் மீது வழக்குப் பதிவு!