கவுஹாத்தி: அஸ்ஸாம் முதலமைச்சர் சர்பானந்த சோனாவால், மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, “மகாராஷ்டிரா காவலர்களால் கைது செய்யப்பட்டு, நவி மும்பை சிறையில் வாடும் தனியார் செய்தி தொலைக்காட்சி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இது குறித்து ட்வீட் செய்துள்ள சர்பானந்த சோனாவால், “அவர் (அர்னாப் கோஸ்வாமி) அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரின் பாதுகாப்பு குறித்து உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து அவர் வெளியிட்ட மற்றொரு ட்வீட்டில், “செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமி-க்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் பேசினேன். முன்னதாக அர்னாப் கோஸ்வாமியின் குடும்பத்தினர் என்னை தொடர்பு கொண்டு பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து பேசினார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
உள் அலங்கார வடிவமைப்பாளர் தற்கொலை செய்துக்கொண்ட வழக்கில், தற்கொலைக்கு தூண்டியதாக எழுந்த குற்றஞ்சாட்டின் அடிப்படையில் கைதாகி, அர்னாப் கோஸ்வாமி நவி மும்பையில் உள்ள தலோஜா சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமி -க்கு இடைக்கால நிவாரணம் கிடைக்குமா? உச்ச நீதிமன்றத்தில் விசாரணை