அசாம்: அசாம் முதலமைச்சர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, "லவ் ஜிஹாத்" மற்றும் மதங்களுக்கு இடையேயான திருமணங்கள் போன்ற முக்கியமான பிரச்னைகளை எடுத்துரைத்து தனது சமீபத்திய அறிக்கைகளால் சர்ச்சையை கிளப்பி உள்ளார். அசாம் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பூபேன் போராவின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில், முதலமைச்சர் ஹிமந்தா நேற்று (ஜூலை 27) வெளியிட்டு உள்ள சிறப்பு அறிக்கையில், தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.
ஒரு இளம்பெண் திருமணம் செய்து கட்டாயப்படுத்தி மதம் மாறும் நிகழ்வையே லவ் ஜிகாத் என்று வரையறுத்து உள்ள முதலமைச்சர் ஹிமந்தா, கிருஷ்ணர் ருக்மணியின் மதத்தை மாற்றவில்லை என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்து ஆண்கள் இந்துப் பெண்களை மணக்க வேண்டும், முஸ்லீம் ஆண்கள் முஸ்லீம் பெண்களை மணக்க வேண்டும். இதுதான் சமூகத்தில் அமைதியை நிலைநாட்ட உதவும். இரு மதத்தினரிடையே காதல் திருமணம் நடந்தால், இது இந்திய அரசியலமைப்பின்படி சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் நடத்தப்பட வேண்டும்.
முஸ்லீம் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள அழகான மற்றும் படித்த முஸ்லீம் பெண்கள் பலர் உள்ளனர். அதேபோல், படித்த இந்து பெண்களை இந்து ஆண்களே திருமணம் செய்ய வேண்டும். இங்கு லக்ஷ்மண் போட்ட கோடு இருப்பது போன்று யாரும் எல்லைகளைக் கடக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தார்.
கோலாகட் டிரிபிள் கொலை விவகாரத்தில், கிருஷ்ணா-ருக்மணியைப் பற்றி குறிப்பிட்ட பூபன் போராவின் விமர்சனத்திற்கு பதிலளித்த முதலமைச்சர் ஹிமந்தா தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். "கிருஷ்ணா - ருக்மணியை லவ் ஜிகாத் விவாதத்திற்கு இழுப்பது மிகவும் தவறானது மற்றும் சனாதனத்திற்கு எதிரானது. இது ஒரு இந்து விரோத செயல்" என்று குறிப்பிட்டு உள்ளார்.
காங்கிரஸைத் தொடர்ந்து சாடிய முதலமைச்சர் ஹிமந்தா, "காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இந்து மதத்தை எதிர்த்து வந்தால் மதரஸா-மசூதியில் அதன் கடைசி முகவரியைக் கண்டுபிடிக்க வேண்டி இருக்கும்" எனவும் தெரிவித்தார்.