கோலாகாட்:உலக காண்டாமிருக தினம் இன்று (செப்.22) கொண்டாடப்படுகிறது. இந்த விலங்கு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த, அழிவின் விளிம்பில் உள்ள காண்டாமிருக இனத்தை பாதுகாக்க இந்த தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து, அசாம் மாநிலத்தில் 1979ஆம் ஆண்டு முதல் அரசின் வசம் உள்ள 2 ஆயிரத்து 479 காண்டாமிருகங்களின் கொம்புகளை எரிக்க திட்டமிடப்பட்டது. இந்த நிகழ்வு, கோலாகாட் மாவட்டத்தில் உள்ள போககாட் பகுதியில் இன்று நடைபெற்றது.
நெருப்பில் ட்ரோன்
அந்நிகழ்வில், அனைத்து கொம்புகளையும் எரியூட்ட ஒரு இரும்பு கூண்டு ஒன்று வைக்கப்பட்டது. அந்த கூண்டு, ட்ரோன் இயந்திரம் மூலம் எரியூட்டுவதற்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது.
இந்நிலையில், அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ட்ரோன் இயந்திரம் மூலம் அதனை எரியூட்டினார். அப்போது, அவர் தவறுதலாக ட்ரோனை நெருப்புக்குள் இயக்கியதில், ட்ரோன் முற்றிலுமாக எரிந்தது.
ட்ரோன் இயந்திரத்தை நெருப்பில் போட்ட அசாம் முதலமைச்சர் அந்த ட்ரோன் டெல்லியில் இருந்து இந்த நிகழ்விற்காக கொண்டுவரப்பட்டது. அந்த ட்ரோன் இயந்திரம் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பு என கூறப்படுகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வமாக அதன் மதிப்பை அரசு வெளியிடவில்லை.
கட்டுக்கதைகளை உடைப்போம்
காண்டாமிருக இனம் அழிந்து வரும் நிலையில் சட்டவிரோதமாக அதை வேட்டையாடி, வெளி சந்தையில் அதன் கொம்புகளை மருத்துவ தேவைக்காக அதிக விலைக்கு விற்கப்படுகிறது. ஆனால் உண்மையில் இதன் கொம்புகளுக்கு அறிவியல் ரீதியாக மருத்துவ பயன் இல்லை எனக் கூறப்படுகிறது.
உலக காண்டாமிருகம் தினத்தையொட்டி காண்டாமிருக கொம்புகளின் மருத்துவ குணம் பற்றிய கட்டுக்கதைகளை உடைக்கவும், வேட்டையாடுதலுக்கு எதிராக வலுவான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அசாம் அரசு கொம்புகளை எரிக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அசாமில் காண்டாமிருகக் கொம்புகள் எரிப்பு - காரணம் என்ன?