கட்ச்: குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில், அமுல் நிறுவனத்தின் ஒட்டகப்பால் பதப்படுத்தும் ஆலை தொடங்கப்பட்டுள்ளது. இது ஆசியாவின் முதல் ஒட்டகப்பால் பதப்படுத்தும் ஆலை என்று கூறப்படுகிறது. உலகிலேயே பாகிஸ்தான் மற்றும் துபாயில் மட்டுமே ஒட்டகப்பாலை பதப்படுத்தும் ஆலைகள் உள்ளன. அடுத்தபடியாக தற்போது குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை மூலம் கட்ச் பாலைவனத்தில் உள்ள ஒட்டக மேய்ப்பர்கள் மற்றும் ஒட்டகப் பண்ணை வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கட்ச் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் வலம்ஜிபாய் ஹொன்பால் கூறும்போது, "கட்ச் மாவட்டத்தில் தற்போது ஒட்டகப்பால் உற்பத்தி சிறப்பாக உள்ளது. மாவட்டத்தில் சர்ஹாத் டெய்ரி, அமுல், சஹ்ஜீவன் உள்ளிட்ட 5 இடங்களில் ஒட்டக பால் சேகரிக்கப்படுகிறது. தினமும் 3,500 முதல் 4,100 லிட்டர் பால் சேகரிக்கப்படுகிறது. ஒட்டகப் பாலுக்கு நல்ல டிமாண்ட் இருப்பதால் இளைஞர்களும் ஒட்டகங்களை வளர்க்கின்றனர். இதனால் ஒட்டகத்தின் விலை 10,000 ரூபாயிலிருந்து சுமார் 40,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.
கட்ச்சில் சுமார் 180 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஒட்டக பால் ஆலையில், ஒட்டகப் பாலில் உள்ள துர்நாற்றத்தை நீக்குகின்றனர். இந்த ஆலை கடந்த சில நாட்களுக்கு முன்பு செயல்படத் தொடங்கியது. இந்த ஆலைக்காக ஒரு லிட்டர் ஒட்டகப் பாலை 51 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதாக தெரிகிறது. இதனால் ஒட்டகம் வைத்திருப்பவர்களின் வருவாய் அதிகரித்துள்ளது.