ஹாங்சோ: பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் பிரிவில் இந்திய அணியைச் சேர்ந்த பிரணவ் சூர்மா Throw-F51 விளையாட்டு பிரிவு இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று உள்ளார். சீனாவின் ஹாங்சோ நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா விளையாட்டு தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் ஆடவருக்கான பாரா ஆசிய விளையாட்டு Throw-F51 போட்டியில் இந்திய வீரர் பிரணவ் இரண்டாவது முயற்சியில் 30.01 மீட்டர் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். அதேபோல், மற்றொரு இந்திய வீரர் தரம்பிர் தனது இரண்டாவது முயற்சியில் 28.76 மீட்டர் எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும், அமித் குமார் 26.93 மீட்டர் எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்து உள்ளனர்.
இதற்கு முன்னதாக பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் உயரம் தாண்டுதல் T63 பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.80 மீட்டர் தாண்டி வெள்ளி பதக்கம் சாதனை படைத்தார். அதே போட்டியில் மற்றொரு இந்திய வீரர் சைலேஷ் குமார் 1.82 மீட்டர் தாண்டி தங்கப் பதக்கத்தை வென்று உள்ளார்.
அதேபோல், உயரம் தாண்டுதல் T47 பிரிவில் நிஷாத் குமார் தங்கப் பதக்கத்தையும், ராம் பால் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று உள்ளனர். மேலும், ஆடவர் குண்டு எறிதல் F11 பிரிவில் மோனு கங்காஸ் வெண்கலப் பதக்கம் வென்று உள்ளார். மகளிருக்கான படகு போட்டி VL2 பிரிவில் உஸ்பெஸ்கிஸ்தான் வீராங்கனை 1.022 விநாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து தங்கமும், இந்திய வீராங்கனை பிரச்சி யாதவ் 1:02.125 மணி நேரத்தில் கடந்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
ஜப்பான் வீராங்கனை 1:03.47 விநாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து வெண்கலம் பதக்கம் வென்றார். மேலும், 50 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் SH1 பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த ருத்ரன்ஷ் கண்டேல்வால் வெள்ளி பதக்கம் வென்று உள்ளார். நடப்பு ஆசிய பாரா விளையாட்டு தொடரில் 3 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களை வென்று இந்தியா புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் போட்டியை நடத்தும் சீனா 11 தங்கம், 11 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்த 29 பதக்கங்களை வென்று உள்ளது.
இதையும் படிங்க:சாதனை மன்னன் விராட் கோலி! நடப்பு தொடரில் இவர் தான் முதலிடம்! ரோகித்தும் லேசுபட்ட ஆள் இல்ல!