ஹாங்சோ:சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி தொடரின் ஆண்கள் ஹாக்கியில் லீக் சுற்றில் உஸ்பெகிஸ்தான் அணியை 16க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.
ஹாக்கி போட்டியின் ஆண்கள் பிரிவில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்று உள்ளன. இவற்றில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், வங்களதேசம், சிங்கப்பூர், உஸ்பெகிஸ்தான் அணிகளும், பி பிரிவில் தென் கொரியா, மலேசியா, சீனா, ஓமன், தாய்லாந்து, இந்தோனேசியா, அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் ஹாக்கி ஏ பிரிவு முதல் ஆட்டத்தில் இந்தியா- உஸ்பெகிஸ்தான் அணிகள் இன்று மோதின. இதில் இந்திய அணி உஸ்பெகிஸ்தான் அணியை 16-க்கு 0 என்ற வித்தியாசத்தில் வீழ்த்தில் அபார வெற்றி பெற்றது. விறுவிறுப்பாக தொடங்கிய முதல் 15 நிமிட சுற்றில் இந்தியாவுக்காக லலித் மற்றும் வருண் கோல் அடித்து தங்கள் புள்ளி கணக்கைத் தொடங்கினர்.
இதன் மூலம் இந்தியா 2-க்கு 0 என முன்னிலை வகித்தது. அதன்பின், அபிஷேக், மன்தீப் கோல் அடிக்க, இரண்டாவது 15 நிமிடத்தில் இந்தியா 4-க்கு 0 என முன்னிலை வகித்தது. இதனையடுத்து இந்திய வீரர்கள் அடுத்தடுத்த கோல் அடிக்க முதல் பாதி நேர முடிவில் 7-க்கு 0 என முன்னிலை வகித்தனர்.