ஹாங்சோ: 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்றது. கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி ஆசிய விளையாட்டுப் போட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இதில் இந்தியா சார்பில் 661 பேர் கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்றனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய தடகள வீரர் வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள் 22 பதக்கங்களைக் கைப்பற்றி கவனத்தை ஈர்த்தனர். அவற்றில் ஏழு தங்கப் பதக்கம் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தடகள பிரிவில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்க பதக்கம் வென்றார்.
மொத்தத்தில், தடகளப் போட்டிகளில் இந்தியாவுக்கு ஆறு தங்கம், 14 வெள்ளி மற்றும் ஒன்பது வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன. வில்வித்தை இந்தியாவின் மகுடத்தில் மற்றொரு வைரக்கல்லை பதித்தது என்று கூறலாம். கிரிக்கெட் மற்றும் கபடி அணிகள் தங்க பதக்கங்களை கைப்பற்றின.
மேலும், ஆண்கள் ஹாக்கி அணி வெற்றிப் பெற்று தங்க பதக்கம் வென்றது மட்டுமல்லாமல் அடுத்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறும், பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டிக்கான தகுதியையும் பெற்றது. இதனைத்தொடர்ந்து பேட்மிண்டனில் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டிக்கு ஹாங்சோ ஒரு நுழைவு வாயிலாக அமைந்தது. இதில் 6 இடங்களை இந்தியா கைப்பற்றியது, குத்துச்சண்டையில் முன்னிலை வகித்த நிகத் ஜரீன், ப்ரீத்தி பவார், பர்வீன் ஹூடா மற்றும் லவ்லினா போர்கோஹைன் ஆகியோர் பாரிஸ் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றனர்.
தடகளம் மற்றும் ஆண்கள் ஹாக்கி அண்யும் அடுத்தாண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆசிய விளையாட்டில் ஒட்டுமொத்தமாக 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 107 பதக்கங்களை வென்று இந்திய அணி சாதனை படைத்து உள்ளது. அதேநேரத்தில், போட்டியை நடத்திய சீனா 201 தங்கம், 111 வெள்ளி, 71 வெண்கலம் என மொத்தம் 383 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.
ஜப்பான் 52 தங்கம், 67 வெள்ளி, 69 வெண்கலம் என மொத்தம் 188 பதக்கங்களுடன் 2வது இடத்தைப் பெற்றது. தென் கொரியா 42 தங்கம், 59 வெள்ளி, 89 வெண்கலம் என மொத்தம் 190 பதக்கங்களுடன் 3வது இடத்தைப் பிடித்தது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை ஹாங்சோவில் உள்ள ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பு நடத்தினர்.
இதையும் படிங்க:சர்வதேச ரிங்பால் போட்டியில் இந்திய வீரர்கள் பதக்கம்.. மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்த ஊர் மக்கள்!