ஹாங்சோ:19 வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி தொடங்கி, சிறப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 70 பதக்கங்களுடன் இந்தியா நேற்றைய(அக்.03) கணக்கை நிறைவு செய்தது.
18 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தமாக 81 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 4வது இடத்தில் இந்தியா உள்ளது. மேலும் கடந்த 2018ஆம் ஆண்டு இந்தோனேஷியா தலைநகர் ஜாகர்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் இந்தியா 70 பதக்கங்களை வென்று இருந்தது. ஆசிய விளையாட்டில் இந்தியாவின் சிறந்த பங்களிப்பாக இது காணப்பட்டது. தற்போது அந்த சாதனையை முறியடித்து இந்தியா புது மைல்கல் படைத்து உள்ளது.
அதைத் தொடர்ந்து இன்று(அக்.04) மகளிர் குத்துச் சண்டையில் இந்திய வீராங்கனை பர்வீன் ஹூடா வெண்கல பதக்கம் வென்று இந்திய அணிக்கு மேலும் ஒரு பதக்கத்தை கூட்டியுள்ளார். இந்திய அணியின் ஆண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற அனாஸ், அமோஜ், அஜ்மல், ராஜேஷ் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
பெண்களுக்கான 800 மீ இறுதிப்போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த சந்தா மற்றும் ஹர்மிலன் பெயின்ஸ் பங்கேற்றனர். இந்தப் போட்டி மாலை 4.45 மணியளவில் தொடங்கிய நிலையில், இதில் ஹர்மிலன் பெயின்ஸ் இரண்டாவதாக வந்து வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.
அதைத் தொடர்ந்து, ஆண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற அவினாஷ் சாப்லே இரண்டாவதாக வந்து வெள்ளி பதக்கம் வென்று, இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கதை அதிகரிக்கச் செய்துள்ளார். பெண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனைகள் வித்யா ராம்ராஜ், ஐஸ்வர்யா, பிராச்சி சுபா வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர்.
மேலும், தங்கப் பதக்கத்தின் நாயகன் நீரஜ் சோப்ரா இன்று அவரது இறுதிபோட்டியில் களம் காண்கிறார். ஈட்டி எறிதல் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா மற்றும் கிஷோர் குமார் களம் காண்கின்றனர். இன்றைய போட்டியில் நீரஜ் சோப்ராவின் ஆட்டம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது சற்று வருத்ததிற்க்குரியது. முதல் வாய்ப்பில் 82. மீ எறிந்த நிலையில், இரண்டாம் வாய்ப்பில் 84மீட்டரும், மூன்றாவது வாய்ப்பில் ஃபவுல் செய்தார். பின்னர் தனது நான்காவது வாய்ப்பில் 88 மீட்டருக்கு மேல் எறிந்து முன்னிலை வகித்து வந்த நிலையில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
மற்றொரு போட்டியாளரான கிஷோர் குமார் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த வகையில் தனது முதல் வாய்ப்பில் 81 மீட்டரும், இரண்டாவது வாய்ப்பில் 74 மீட்டரும் எறிந்தார். இவரது இரண்டாம் வாய்ப்பில் இவருக்கு ஃபவுல் கொடுக்கப்பட்ட நிலையில், பின்னர் அது மறுபரிசீலனை செய்யப்பட்டது. பின்னர் தனது மூன்றாவது வாய்ப்பில் 86 மீட்டர், நான்காவது வாய்ப்பில் 87.54 மீட்டர் எறிந்து இரண்டாம் இடம் வகித்து, வெள்ளி பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார்.
அதைத் தொடர்ந்து நடந்து வரும் உயரம் தாண்டுதல் போட்டியில், இந்தியாவை சேர்ந்த சர்வேஷ் அனில் குஷாரே மற்றும் ஜெஷ்ஷி சந்தேஷ் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பெண்களுக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த ஷீனா வர்க்கே பங்கேற்று, 6வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Asian Games: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு வெண்கலம்! இந்திய வீராங்கனை பர்வீன் ஹூடா சாதனை!