டெல்லி: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகின்றது. போட்டிகளின் மூன்றாம் நாளான இன்று (செப்.27) அதிகாலை நிலவரப்படி இந்தியா மொத்தமாக 20 பதக்கங்களை வென்று உள்ளது. குறிப்பாக நேற்று (செப்.26) இந்தியா 2 தங்கம் 6 வெண்கலம் என 6 பதக்கங்களை வென்றது.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஷெபாலி வர்மா, அனிஷ்பன்வாலா மற்றும் ஆதர்ஷ் சிங் ஆகியோர் நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் விதமாகச் சிறப்பான விளையாடி வருகின்றனர்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியானது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் முறையாகப் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல் முறையாகப் பங்கேற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கை மகளிர் அணியை வீழ்த்தித் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
ஆசிய கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் முதல் அரை சதம் அடித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் ஷெபாலி வர்மா. இவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Asian Games : துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி! இந்திய மகளிர் அணி அசத்தல்!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் நேற்று (செப்.26) நடைபெற்ற 25 மீட்டர் துப்பாக்கிச் சூடும் போட்டியில் அனிஷ் பன்வாலா வெண்கலப் பதக்கம் பெற்றார். 2002ஆம் ஆண்டு பிறந்த அனிஷ் பன்வாலா 2018ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றார் அதன் பின் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியிலும் தங்கப் பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்ற குறைந்த வயது வீரர் இவர் ஆவார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான ரௌலிங் போட்டியில் (படகுப் போட்டி) இந்திய அணி இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. இந்த படகுப் போட்டியில் ஹரியானாவைச் சேர்ந்த பர்மிந்தர் சிங் இடம் பெற்று தனது சிறந்த விளையாட்டினை வெளிப்படுத்தினார். மேலும் இவர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இந்தியக் குத்துச்சண்டை வீரர் தீபக் போரியா 51 கிலோ எடை கொண்ட குத்துச்சண்டை பிரிவின் 32வது சுற்றில் மலேசியக் குத்துச்சண்டை வீரர் முகமது ஆரிஃபினை தோற்கடித்துள்ளார். இன்னும் பல சுற்றுக்கள் இருக்கும் நிலையில் கண்டிப்பாகப் பதக்கங்களைப் பெறுவார் என அவரது குடும்பத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் 570 பேர் கலந்து கொண்டு 80 பதக்கங்களை வென்றிருந்தனர் தற்போது 2023ஆம் ஆண்டு நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் 655 வீரர்கள் விளையாடுகின்றனர். இன்று மூன்றாம் நாள் போட்டி தொடக்கத்தில் இந்தியா 20 பதக்கங்கள் பெற்று 6வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தங்கம் விலை தொடர் சரிவு! இன்னைக்கு எவ்வளவு குறைஞ்சது தெரியுமா?