ஆசியாவின் முதல் பெண் டிரக் டிரைவரும் குடியரசுத் தலைவர் விருது பெற்றவருமான பார்வதி ஆர்யா தனது 75ஆவது வயதில் காலமானார்.
கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவர் நேற்று முன் தினம் (நவ.17) உயிரிழந்தார்.
நிதி நெருக்கடியால் ஓட்டுநர் வேலை
சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்த பார்வதி ஆர்யாவுக்கு மொத்தம் எட்டு சகோதரிகள், மூன்று சகோதரர்கள். இந்நிலையில், குடும்பத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாகவும், தன் உடன் பிறந்தவர்களை பார்த்துக் கொள்வதற்காகவும் தன் இளம் வயதிலேயே டிரக் இயக்கக் கற்றுக் கொண்டுள்ளார்.
'இந்திராவால் முடியும்; என்னால் முடியாதா?'
அன்றைய காலகட்டத்தில் வாகனம் ஓட்டக் கற்றுக்கொள்வதை விட பெண்கள் ஆர்டிஓ அலுவலர்களிடமிருந்து உரிமம் பெறுவது மிகக் கடினமான விஷயமாக இருந்துள்ளது.
அத்தகைய சூழலில், 'இந்திரா காந்தியால் நாட்டை ஆள முடியும் என்றால் என்னால் லாரி ஓட்ட முடியாதா...' என பார்வதி அதிரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். அதனையடுத்து 1978ஆம் ஆண்டு, தனது ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றார்.