அமிர்தசரஸ்: பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து நேற்று (செப்.28) ராஜினாமா செய்தார். இந்நிலையில் பஞ்சாப் புதிய முதலமைச்சர் எஸ். சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் அமைச்சர்கள் கூட்டம் அவரது இல்லத்தில் நடைபெற்றது.
முன்னதாக, இது தொடர்பாக ட்வீட் செய்திருந்த நிதியமைச்சர் மன்பீரித் சிங், “முதலமைச்சர் எஸ். சரண்ஜித் சிங் சன்னியுடனான கலந்துரையாடல் சண்டிகரில் உள்ள எங்கள் இல்லத்தில் மீண்டும் இரவு வரை தொடர்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து புதன்கிழமை (செப்.29) காலை சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
பஞ்சாபின் காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் நெருக்கடியை தீர்க்கும் முயற்சியாக இன்று டெல்லியில் இருந்து பஞ்சாப் செல்கிறார். அவர் சித்துவை சந்தித்து ராஜினாமாவை திரும்ப பெறும்படி சமாதானப்படுத்த வாய்ப்புள்ளது. அவர்களின் சந்திப்பு பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு சித்து அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், “பஞ்சாபின் எதிர்காலம் மற்றும் பஞ்சாபின் நலனுக்கான நிகழ்ச்சி நிரலில் நான் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது. எனவே, நான் ராஜினாமா செய்கிறேன். காங்கிரஸ் தொண்டராக தொடர்ந்து நீடிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : டெல்லியில் கேப்டன்.. கலகலக்கும் காங்கிரஸ்.. அமித் ஷா, நட்டாவுடன் சந்திப்பு?