தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"டெல்லி பட்ஜெட்டை தயவு செய்து தடுக்காதீர்கள்" - பிரதமருக்கு கெஜ்ரிவால் கடிதம்! - டெல்லி பட்ஜெட் கூட்டத்தொடர்

உள்கட்டமைப்பு வசதிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை விட விளம்பரங்களுக்கு குறைவாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இது போன்ற காரணங்களை கூறாமல், டெல்லி பட்ஜெட்டுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.

Arvind
Arvind

By

Published : Mar 21, 2023, 8:51 PM IST

டெல்லி: டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கும் மத்திய பாஜக அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. டெல்லி மதுபான ஊழல் வழக்கில் ஆம்ஆத்மி அமைச்சர்கள் உள்பட பலரும் சிக்கியுள்ளனர். இந்த ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். இதையடுத்து சிசோடியாவிடமிருந்த நிதித்துறை கைலாஷ் ஹெக்லோட்க்கு கொடுக்கப்பட்டது.

இதனிடையே கடந்த மார்ச் 17ஆம் தேதி டெல்லி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. 2023-24ஆம் ஆண்டுக்கான டெல்லி பட்ஜெட் இன்று(மார்ச்.21) தாக்கல் செய்யப்பட இருந்தது. ஆம்ஆத்மி ஆட்சியில் 8 ஆண்டுகளாக மணிஷ் சிசோடியா பட்ஜெட்டை தாக்கல் செய்து வந்த நிலையில், இன்று கைலாஷ் ஹெக்லோட் தாக்கல் செய்ய இருந்தார்.

ஆனால், திட்டமிட்டபடி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவில்லை என்றும், மத்திய பாஜக அரசு டெல்லி பட்ஜெட் தாக்கலை தடுத்து நிறுத்திவிட்டதாகவும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அரவிந்த் கெஜ்ரிவால், 75 ஆண்டுகால இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு மாநிலத்தின் பட்ஜெட் தாக்கலை மத்திய அரசு தடுத்து நிறுத்தியுள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்தது. சில காரணங்களுக்காக டெல்லி பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், இது தொடர்பாக டெல்லி அரசுக்கு கடந்த 17ஆம் தேதியே கடிதம் எழுதியதாகவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெல்லி முதலமைச்சரின் குற்றச்சாட்டு தவறானது. பட்ஜெட்டுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பதற்கு முன்பாகவே, பட்ஜெட்டை தாக்கல் செய்ய தேதி அறிவித்தது டெல்லி அரசின் தவறு. டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால், கடந்த 28 ஆண்டுகளாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடனேயே டெல்லி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் தடுத்து நிறுத்தப்பட்டதாக டெல்லி அரசு கூறுவது சட்டப்படி தவறான கூற்று" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெல்லி பட்ஜெட்டை தாக்கல் செய்ய ஒப்புதல் அளிக்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். அதில், "நாட்டின் 75 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக ஒரு மாநில பட்ஜெட் தாக்கல் நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லி மக்களை பிரதமர் மோடி வெறுக்கிறாரா? - தயவு செய்து தாமதப்படுத்தாமல் பட்ஜெட்டுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். இதை டெல்லி மக்கள் கைகூப்பி வேண்டுகிறார்கள்.

உள்கட்டமைப்பு வசதிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை விட விளம்பரங்களுக்கு அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் விளம்பரங்களுக்கு குறைந்த அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மொத்த பட்ஜெட்டின் மதிப்பு 78,800 கோடி ரூபாய். அதில் 22,000 கோடி ரூபாய் உள்கட்டமைப்புக்காகவும், 550 கோடி ரூபாய் விளம்பரத்திற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் பட்ஜெட்டுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி - அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details