குஜராத்: குஜராத் மாநிலம் சூரத்தில், நேற்று(2/5/2022) ஆம்ஆத்மி மற்றும் பாஜகவினரிடையே மோதல் ஏற்பட்டது. ஆம்ஆத்மியினரின் பேரணியின்போது, பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆம்ஆத்மியினரை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே ஆம்ஆத்மி நிர்வாகி ஒருவரை பாஜகவினர் கூட்டு சேர்ந்து கடுமையாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜகவினருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
அதில், "இந்த குண்டர்களைப் பாருங்கள். வெளிப்படையாகவே இவ்வாறு தாக்குதல் நடத்துகிறார்கள்- கும்பலாக சேர்ந்து ஒருவரை தாக்கும் கலாசாரத்தை நாடு முழுவதும் உருவாக்கிவிட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதுதான் நாட்டின் முன்னேற்றமா? என்று கேள்வி எழுப்பியுள்ள கெஜ்ரிவால், இவர்கள் ஒருபோதும் உங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியையும், வேலைவாய்ப்பையும் வழங்க மாட்டார்கள் - இவர்களது அரசியலுக்கு படிப்பறிவு இல்லாத குண்டர்கள்தான் தேவை. தேசபக்தி உள்ள அனைத்து இளைஞர்களும் பாஜகவினருக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து, ஆம்ஆத்மியினர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசாரை கண்டித்தும், தாக்குல் நடத்திய பாஜகவினரை கண்டித்தும், குஜராத்தில் பல நகரங்களில் பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டு ஆம்ஆத்மியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:ஜஹாங்கிர்புரியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் ரம்ஜான்... இனிப்புகள் வழங்கி கொண்டாடிய இந்து, இஸ்லாமிய மக்கள்..!