இட்டாநகர்:அருணாச்சலப் பிரதேசத்தின் மிக மூத்த பழங்குடியின இனம் புகன். புகன் பழங்குடியினர் அம்மாநிலத்தில் உள்ள கமெங்க் மாவட்டத்தின் ஒரு பகுதியில் வசித்து வருகின்றனர்.
2006ஆம் ஆண்டு அவர்கள் வசிக்கும் பகுதியில், லியோசிச்லா குடும்பத்தைச் சேர்ந்த அரிய பறவை தென்பட்டது. இப்பழங்குடியினர் இயற்கையை மதிக்கக்கூடியவர்கள் என்பதால், அந்தப் பறவை இனத்தை பாதுகாக்க முயற்சிகள் எடுக்கத்தொடங்கினர். பழங்குடியின இனத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நரேஷ் குளோ பறவைக்கான வாழ்விடத்தை அமைக்க 17 சதுர கி.மீ அளவுள்ள தனது சொந்த நிலத்தை புகன் மக்களுக்கு கொடுத்தார்.
அவர்களும், அந்த நிலத்தை பறவையின் வாழ்விடமாக மாற்றி பராமரித்து வருகின்றனர். தற்போது அந்த இடம் சிங்சங் புகன் கிராமத்தின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என அழைக்கப்படுகிறது. இந்த வனப்பகுதியை பராமரிக்க புகன் பழங்குடியின மக்கள் சிறுவர்கள், பெண்கள் என 10 பேர் அடங்கிய குழுவையும் அமைத்துள்ளனர்.