மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் அலிபாக்கை சேர்ந்த கட்டட உள்வடிவமைப்பாளர் அன்வய் நாயக்(வயது53). இவருக்கு கட்டட உள்வடிவமைப்பு பணிகள் செய்ததற்கான நிலுவை தொகையை ரிபப்ளிக் டி.வி. ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி(47) வழங்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், கடன் தொல்லை மற்றும் அர்னாப் பக்கத்திலிருந்து வந்த கொலை அச்சுறுத்தல் காரணமாக மனமுடைந்த அவர் கடந்த 2018ஆம் ஆண்டு அன்வய் நாயக் அலிபாக்கில் உள்ள வீட்டில் தாயுடன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கி இருந்த இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்க காவல் துறையினருக்கு மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் உத்தரவிட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து, கடந்த 4ஆம் தேதியன்று அதிகாலை அலிபாக் காவல்துறையினர் மும்பை லோயர் பரேலில் உள்ள அர்னாப் கோஸ்வாமியின் வீட்டுக்கு சென்று, கட்டட வடிவமைப்பாளர் மற்றும் அவரது தாயாரைத் தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக பெரோஸ் ஷேக், நிதேஷ் சர்தா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.