ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் பகுதியில், கடந்த 10ஆம் தேதி பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை சுற்றிவளைத்து, பாதுகாப்பு படையினர் என்கவுன்டர் நடத்தினர். இந்த ஆபரேஷனில் பாதுகாப்புப் படையில் இருந்த "ஜூம்" என்ற நாயும் ஈடுபட்டிருந்தது. பயங்கரவாதிகளின் இருப்பிடத்திற்குள் புகுந்த ஜூம், அவர்களை தாக்கியது.
அப்போது, பயங்கரவாதிகள் நாயை துப்பாகியால் சுட்டனர். படுகாயமடைந்த நாய், ஸ்ரீநகரில் உள்ள ராணுவ கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அதன் முகம் மற்றும் காலில் துப்பாக்கி குண்டுகள் இருந்ததால், அதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நாய் இன்று(அக்.13) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.