ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள மகவா பகுதியில் இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் இன்று(மே.4) வழக்கமான ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தது. அதில், இரண்டு விமானிகள் மற்றும் ஒரு தொழில்நுட்ப ஊழியர் இருந்ததாகத் தெரிகிறது.
மூவருடன் பறந்துகொண்டிருந்த ஹெலிகாப்டர் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் நிலைதடுமாறி ஆற்றில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த மூன்று பேரும் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப்படையினர், காயமடைந்தவர்களை மீட்டு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், அதனால் அவசரமாக தரையிறக்க முயன்றபோது விபத்து ஏற்பட்டதாகவும் ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இத்துடன் சேர்த்து, இந்தியாவில் கடந்த 7 மாதங்களில் நான்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளாகியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தில், ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர்.
அதேபோல், அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த அக்டோபரில், மேல் சியாங் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், 4 வீரர்கள் பலியாகினர். அதே மாதம், தவாங் அருகே சீன எல்லைப் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர். ராணுவ ஹெலிகாப்டர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள், இந்திய ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் ராணுவ வீரர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்புகின்றன.
இதையும் படிங்க: Chhattisgarh Accident: சத்தீஸ்கரில் கோர விபத்து.. திருமண நிகழ்வுக்கு சென்ற 10 பேர் பலி!