தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மணிப்பூரில் வன்முறை - தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் பாதிப்பு - ராணுவப் படைகள் குவிப்பு! - மெய்டீஸ் சமூகம் எஸ்டி பிரிவில் சேர்க்க கோரிக்கை

மணிப்பூரில் பழங்குடிகளுக்கும் பழங்குடிகள் அல்லாதோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்த நிலையில், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர பாதுகாப்புப் பணியில் ராணுவப் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

army
மணிப்பூர்

By

Published : May 4, 2023, 5:48 PM IST

மணிப்பூர்:மணிப்பூரில் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் மெய்டீஸ் (Meiteis) சமூகத்தினர், தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக சட்ட ரீதியாகவும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், மெய்டீஸ் சமூகத்தினரை பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு, குக்கி, சோமி உள்ளிட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், பெரும்பான்மை மக்களான மெய்டீஸ்-ன் வாக்குகளை பெறுவதற்காக பாஜக அரசு, அவர்களது கோரிக்கையை நிறைவேற்றித் தர முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மெய்டீஸ் சமூகத்தினரை எஸ்.டி. பிரிவில் சேர்க்கக் கூடாது என்று வலியுறுத்தியும், நேற்று(மே.3) மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர்கள் அமைப்பு சார்பில் சுமார் 10 மலை மாவட்டங்களில் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து பழங்குடியினர் அல்லாத பிரிவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் சவ்ரசந்திரபூரில் பழங்குடிகளுக்கும் பழங்குடிகள் அல்லாதோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், பல இடங்களில் கலவரம் வெடித்தது. அப்போது வீடுகளுக்கும், வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியதால், அருகில் உள்ள பல மாவட்டங்களிலும் வன்முறை சம்பவங்கள் வெடித்தன. இந்த வன்முறை சம்பவங்களில் ஏராளமானோர் காயமடைந்தனர்.

கலவரங்களைக் கட்டுப்படுத்த பல்வேறு மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இணைய சேவையும் முடக்க உத்தரவிடப்பட்டது. மேலும் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை போலீசார் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர். நேற்றிரவு முழுவதும் 7,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலவரம் நடந்த பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், பாதுகாப்புக்காக ராணுவப்படைகள் குவிக்கப்பட்டன.

இது குறித்து பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் லெஃப்டினன்ட் கர்னல் மகேந்திர ராவத் கூறுகையில், "மணிப்பூரில் கலவரம் நடைபெற்ற பகுதிகளில் சூழ்நிலையை கட்டுப்பாட்டில் வைக்க, ராணுவக் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதில் ராணுவம் உறுதியாக உள்ளது. குறிப்பாக சுராசந்த்பூர், இம்பால், கேபிஐ பகுதிகளில் வன்முறை வெடித்தது. காலையில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மக்களை வெளியேற்றும் ராணுவத்தினர்

சுமார் 4,000 கிராம மக்கள் மீட்கப்பட்டு, பல்வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். சட்டம் ஒழுங்கு பிரச்னைகளைத் தவிர்க்க மணிப்பூரில் அடுத்த ஐந்து நாட்களுக்கு இணைய சேவையை மணிப்பூர் அரசு நிறுத்தி வைத்துள்ளது. வன்முறை நடந்த பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்று கூறினார்.

இந்நிலையில் பர்மியத் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான மணிப்பூர் - மியான்மர் எல்லையில் உள்ள மோரே நகரில் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - 3 வீரர்கள் படுகாயம்!

ABOUT THE AUTHOR

...view details