மேற்குவங்கம்:மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் வீடு, கொல்கத்தாவில் காளிகாட் பகுதியில் உள்ளது. இந்த நிலையில், இன்று(ஜூலை 21) பிற்பகலில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி வீட்டிலிருந்தபோது, 'Police' என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார் ஒன்று, அவரது வீட்டிற்குள் நுழைய முயற்சித்தது. மம்தாவின் வீடு உள்ள ஹரிஷ் சாட்டர்ஜி தெருவுக்குள் வேகமாக வந்து, அவரது வீட்டிற்குள் நுழையச் சென்றது. அப்போது, அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் காரை தடுத்து நிறுத்தினர்.
பின்னர், காரை ஓட்டி வந்த நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் தனது பெயர் நூர் ஆலம் என்றும், தான் முதலமைச்சர் மம்தா பானர்ஜியைச் சந்திப்பதற்காகவே வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பாதுகாப்பு விதிகளை மீறி முதலமைச்சரின் வீட்டிற்குள் நுழைய முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் கஞ்சா மற்றும் ஆயுதங்கள் இருந்ததாகவும் தெரிகிறது.
இது தொடர்பாகக் கொல்கத்தா காவல்துறை ஆணையர் வினீத் கோயல் கூறும்போது, "காரில் மம்தா பானர்ஜியின் வீட்டிற்குள் நுழைய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் முதலமைச்சரைச் சந்திக்க விரும்பியதாகவும், அதற்காகவே இந்த செயலை செய்ததாகவும் கூறினார். அவரிடமிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அவரிடம் எல்லை பாதுகாப்புப் படை உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகளின் அடையாள அட்டை இருந்தது. இது ஒரு தீவிரமான பிரச்சினை. அவரது உண்மையான நோக்கம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.