டெல்லி: ராணுவ நாள் ஆண்டுதோறும் ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1949ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம்தேதி, சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவத் தளபதியாக, ஃபீல்டு மார்ஷல் கோதண்டேரா எம். கரியப்பா பொறுப்பேற்றார்.
இதைக் கொண்டாடும்விதமாக ஆண்டுதோறும் ராணுவ நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் முப்படையின் தளபதிகள் ராணுவப்படைத் தளபதி எம்.எம். நரவணே, விமானப்படை தளபதி வி.ஆர். சௌத்ரி, கடற்படைத் தளபதி ஆர். ஹரிகுமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "நமது இந்திய ராணுவ வீரர்கள் சவாலான பகுதிகளில் சேவையாற்றுகின்றனர். இயற்கைப் பேரழிவுகள் உள்ளிட்ட நெருக்கடியான காலகட்டத்தில் சக குடிமக்களுக்கு முன்னின்று உதவுகின்றனர். இந்தியாவின் அமைதியைக் காக்கும் பணிகளில் ராணுவத்தின் சிறப்பான பங்களிப்பை எண்ணி இந்தியா பெருமைகொள்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.
அதேபோல், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், "இந்தியாவின் பாதுகாப்பிற்கு ராணுவம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எல்லைப் பாதுகாப்பு, அமைதியைப் பேணுவதில் நமது வீரர்கள் நேர்த்தியான தொழில்முறை, தியாகம், வீரம் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றனர். உங்கள் சேவைக்கு நாடு நன்றி கூறுகிறது. ஜெய் ஹிந்த்!" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ARMY DAY: இந்திய ராணுவம் வெளியிட்ட மிரட்டல் வீடியோ