டெல்லி:மதுபான உரிமம் வழங்கியதில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், நேற்று முன்தினம் (ஆக.18) டெல்லி துணை முதலமைச்சரும், ஆம்ஆத்மி மூத்த தலைவருமான மனிஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட 20 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக மனிஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளை குறிவைத்து மத்திய பாஜக அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மத்திய ஏஜென்சிகள் மீதான இந்த குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகின்றன. இந்த குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை சற்று ஆராய்ந்து பார்க்கலாம்.
எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த மத்திய ஏஜென்சிகளை பாஜக அரசு பயன்படுத்துவதாக எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, கடந்தாண்டு ஏப்ரல் 2ஆம் தேதி, திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.
மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு தொடர்பாக முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மருமகனான அபிஷேக் பானர்ஜி, அவரது மனைவி உள்ளிட்டோர் வீட்டில் சிபிஐ சோதனை நடைபெற்றது. தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்தபோது, சாரதா சிட் ஃபண்ட்ஸ் நிதி முறைகேடு தொடர்பாக மதன் மித்ரா, விவேக் குப்தா ஆகிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் வீட்டில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அதில் மதன் மித்ரா கைது செய்யப்பட்டார். அதே வழக்கில், திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், சதாப்தி ராய், தேப்ஜானி முகர்ஜி ஆகியோருக்குச் சொந்தமான சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.
இதேபோல், கேரள சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக, தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், முதலமைச்சர் பினராயி விஜயனின் வற்புறுத்தலின் பேரில் இந்த குற்றத்தை செய்ததாக அமலாக்கத்துறை கூறியது. இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட சிலரை முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக சாட்சியமளிக்க வற்புறுத்தியதற்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மாநில குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.