ஹைதராபாத்:விபுல் அம்ருத்லால் ஷாவின் தயாரிப்பில், இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள படம், 'தி கேரளா ஸ்டோரி (The Kerala Story)'. கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி வெளியான இப்படத்தின் டிரைலரில் இது உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் என கூறப்பட்டுள்ளதோடு, கேரளாவில் உள்ள கல்லூரி விடுதியின் ஒரு அறையில் ஒரு இஸ்லாமிய பெண்ணும், 3 பிற மதங்களைச் சார்ந்த பெண்களும் தங்கி இருப்பதாகவும், இஸ்லாமிய பெண் பிற மதங்களைச் சார்ந்த பெண்களை மூலைச் சலவை செய்து, அவர்களை இஸ்லாமிய மதத்துக்கு மாற்றுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
பின்னர், அவர்கள் தடை செய்யப்பட்டுள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளுக்காக பணிபுரிவதற்கு சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தப்படுவதாகவும், கேரளாவில் இருந்து இதேபோல் கிட்டத்தட்ட 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ்(ISIS) அமைப்புகளுக்கு செல்வதாக காட்டப்பட்டிருக்கிறது.
இந்தப் படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து நாடு முழுவதும் சர்ச்சைகளும் எதிர்ப்பு குரல்களும் கிளம்பத் துவங்கியது. குறிப்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், "மதச்சார்பற்ற மண்ணான கேரளாவை, மதத் தீவிரவாதத்தின் மண்ணாக காட்டுவதற்கான சங்பரிவாரின் கருத்தை இந்த திரைப்படம் பரப்புகிறது என்பதை இந்த டிரைலர் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. விசாரணை முகமைகளும், நீதிமன்றங்களும், மத்திய உள்துறை போன்றவை மறுத்திருக்கும் ‘லவ் ஜிகாத்’ குற்றச்சாட்டை இந்த திரைப்படத்தில் மையப்படுத்துவது ஒரு திட்டமிட்ட நடவடிக்கை. வகுப்புவாத விஷ விதைகளை விதைக்க முயற்சி செய்கிறது. மத வெறியையும், பிரிவினையையும் உருவாக்க சினிமாவைப் பயன்படுத்துபவர்களை கருத்து சுதந்திரத்தில் நியாயப்படுத்து சரியல்ல. சமூக விரோத செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்" என தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பு தங்களது சமூக வலைதள பக்கத்தில், “தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது உண்மை என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். கடத்தப்பட்ட பெண்களின் முகவரியைக் கொடுங்கள் என்று கேட்டால், அதற்கு மவுனம் மட்டுமே காக்கின்றனர்.
எனவே, நாங்கள் ஒரு சவாலை முன் வைக்கிறோம். நாடு கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்களின் அடையாளத்தை ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டுங்கள். அவ்வாறு நிரூபிக்கும் நபருக்கு 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும். எங்களது மாவட்ட அலுவலகங்களில் மே 4ஆம் தேதி காலை 11 மணி முதல் 5 மணிக்குள் உண்மைத் தன்மையை நிரூபித்து பரிசை பெற்றுச் செல்லலாம்" என குறிப்பிட்டு இருந்தனர்.