தியோகர்(ஜார்க்கண்ட்): ஜார்க்கண்ட்டில் கடந்த 31ஆம் தேதி மாலையில், பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே, அவரது இரண்டு மகன்கள், எம்.பி மனோஜ் திவாரி உள்ளிட்டோர் தியோகர் விமான நிலையத்திற்குச் சென்றுள்ளனர். அவர்கள் தனி விமானம் வேண்டும் என கோரியுள்ளனர்.
தியோகர் விமான நிலையத்தில் இரவு நேர விமான சேவை இல்லை என்பதால், தனி விமானத்தை இயக்க முடியாது என விமானிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விமானிகள் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் ஆலோசித்துக் கொண்டிருந்தபோது, பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே உள்ளிட்டோர் அத்துமீறி கட்டுப்பாட்டு அறைக்குள் நுழைந்து, விமானிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. நீண்ட வாக்குவாதத்திற்குப் பிறகு, அவர்களது தனி விமானத்தை இயக்க அனுமதி அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக தியோகர் விமான நிலையத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்புப் பொறுப்பாளரான டிஎஸ்பி சுமன் ஆனந்த், குந்தா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பாதுகாப்பு விதிகளை மீறி, விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்குள் நுழைந்து தகராறு செய்த, பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
அவர்கள் இரவு நேர சேவை இல்லாதபோதும், விமானிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கைக்கு உடந்தையாக இருந்த விமான நிலைய இயக்குநர் சந்தீப் திங்ரா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகாரில் கோரியுள்ளார். இந்தப் புகாரின் பேரில், பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'அயன்' பட பாணியில் வயிற்றில் போதைப்பொருள் கடத்தியவர் கைது... ரூ.13 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்...