பெங்களூரு:பிரபல முன்னணி மொபைல்போன் உற்பத்தி நிறுவனங்களில் தனித்தன்மையுடன் விளங்கி வருவது, ஆப்பிள் (Apple). இதில் உள்ள ஆப்பிள் ஐபோன் மற்றும் அதன் இதர தயாரிப்புகளை வாங்குவதற்காக தனியாக பணத்தை சேமித்து வைப்பதும், அதிக ஊதியம் கொண்ட பணியில் சேர்வதும், முதல் மாத ஊதியத்திலேயே இந்த ஆப்பிள் ஐபோனை வாங்குவதும் என பலருக்கும் ஆசை உண்டு.
அதிலும் குறிப்பாக, ஆப்பிள் ஐபோன் என்பது ஒருவரின் பொருளாதார தரத்தை சமூகத்தில் நிர்ணயிக்கும் ஒரு கருவியாகவும் இருந்து வருகிறது. இப்படியான இந்த ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை, ஆப்பிள் இங்க் (Apple Inc) மற்றும் அதன் இணை நிறுவனமான ஃபாக்ஸ் கான் டெக்னாலஜி குழுமம் (Fox Con Technology) ஆகிய இரண்டு நிறுவனங்களும் உற்பத்தி செய்து வருகின்றன.
இந்த நிலையில் ஆப்பிள் தயாரிப்புகளின் உற்பத்தி தொழிற்சாலையை 700 மில்லியன் டாலர் முதலீட்டில் இந்தியாவில் நிறுவ உள்ளதாகவும், அதிலும் கர்நாடகா மாநிலத்தில் இதன் தொழிற்சாலை நிறுவப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''ஆப்பிள் போன்கள் விரைவில் கர்நாடகாவில் தயாராக உள்ளது.
இது புதிய வேலைவாய்ப்புகளை வழங்குவது மட்டுமல்லாமல், பல்வேறு வாய்ப்புகளுக்கான கதவைத் திறந்துள்ளது. நாம் பிரதமர் மோடியின் தலைமையில் 2025ஆம் ஆண்டிற்குள் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு உழைக்கத் தயாராக வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கர்நாடகா மாநில திறன் மேம்பாடு, தொழில்முனைவோர், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''ஆப்பிள் போன், தனது உற்பத்தி தொழிற்சாலையை 300 ஏக்கர் பரப்பளவில் கர்நாடகாவில் நிறுவ உள்ளது.
இது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகிய இருவரும் இணைந்து செய்த முதலீடு போன்றது. இதன் மூலம் உருவாகும் வேலைவாய்ப்பால் 1 ட்ரில்லியன் பொருளாதார இலக்கை அடைய உள்ளோம்'' எனக் கூறியுள்ளார்.
மேலும் புதிதாக உருவாக உள்ள ஆப்பிள் போன் உற்பத்தி தொழிற்சாலை, பெங்களூரு விமான நிலையத்துக்கு அருகில் 300 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தொழிற்சாலையில் ஆப்பிள் போன்கள், ஆப்பிள் தயாரிப்புகளின் உதிரி பாகங்கள் ஆகியவற்றுடன் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் வாகனங்களும் தயாரிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் மூலம் ஃபாக்ஸ் கான் நிறுவனத்தின் அதிக முதலீடு இந்தியாவில்தான் உருவாக்கப்பட உள்ளது. இதன் காரணமாக உலகின் மிகப்பெரிய மின்னணு நுகர்வோரான சீனா, தனது நிலைப்பாட்டில் இருந்து இறங்கி உள்ளதாகத் தெரிகிறது. மேலும் கர்நாடகாவில் நிறுவப்பட உள்ள ஆப்பிள் போன் தொழிற்சாலை மூலம் 1 லட்சம் வேலைவாய்ப்புகள் நிரப்பப்பட வாய்ப்புள்ளன. அதேநேரம் சீனாவின் சென்கசோவில் (Zengazo) உள்ள ஆப்பிள் போன் உற்பத்தி நிறுவனத்தில் 2 லட்சம் பேர் வேலை செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க:கோடைக் காலத்தில் மின் கட்டணத்தை குறைக்க 5 டிப்ஸ்